வாடிக்கையாளர்களின் நகைகளுடன் கடை உரிமையாளர்கள் ஓட்டம்; பாதிக்கப்பட்டோர் கமிஷனரிடம் மனு

மதுரை: மதுரையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், பழைய நகைகளை புதிய டிசைன் நகைகளாக மாற்றித்தருவதாக கூறி, ரூ.பல கோடி மதிப்பிலான நகைகளுடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரை தெற்காவணி மூலவீதி மேலசெட்டிய தெருவில் மனோஜ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்தவர்கள் பூபதி, ராஜசேகரன். இவர்களிடம் மதுரை உட்பட வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளாக வாங்கிச் செல்வது வழக்கம். வாடிக்கையாளர்கள் புது நகை வாங்க வந்தாலும் அவர்களிடம் புது டிஸைனில் செய்து தருவதாக கூறி பூபதியும், ராஜசேகரனும் 2 பவுன் முதல் 7 பவுன் வரை பழைய நகைகளை கேட்டு வாங்கியுள்ளனர். இப்படி 50க்கும் மேற்பட்டோரிடம் ரூ.பல கோடி மதிப்புள்ள நகைகளை வாங்கிக்கொண்டு 2 மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் தலைமறைவாயினர்.

கடையும், வீடும் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர்.

ஆனால் நடவடிக்கை எடுக்காததால், நேற்று கமிஷனர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கமிஷனர் லோகநாதனிடம் மனு அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது: சிலர் குடும்பத்தினருக்கு தெரியாமல் நகை செய்ய கொடுத்திருந்த நிலையில் நகையை எடுத்துச் சென்று விட்டார்கள். வயலில் களையெடுத்து சேர்த்து வச்ச காசு, குழந்தையோட தாயத்து எல்லாம் கொடுத்து ஏமாந்துவிட்டோம். கல்யாணம், காதுகுத்து, படிப்புக்காக சேர்த்துவச்சு அவ்வளவு நகையும் போச்சு. இவ்வாறு கூறி கண்கலங்கினர்.

Advertisement