இங்கிலாந்தை வென்றது தென் ஆப்ரிக்கா * முதல் 'டி-20'ல் அபாரம்

கார்டிப்: மழையால் பாதிக்கப்பட்ட முதல் 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 14 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கார்டிப்பில் நடந்தது. மழை காரணமாக தலா 9 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக், பீல்டிங் தேர்வு செய்தார்.
பிரவிஸ் விளாசல்
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், ரிக்கிள்டன் (0) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ஹுவான் டிரி பிரிட்டோரியஸ் 2 ரன் எடுத்தார். மார்க்ரம் 14 பந்தில் 28 ரன் எடுத்து, அடில் ரஷித் சுழலில் சிக்கினார். வழக்கம் போல சிக்சர்களாக விளாசிய பிரவிஸ், 10 பந்தில் 23 ரன் (3 சிக்சர்) எடுத்து வெளியேறினார்.
ஸ்டப்ஸ் (13) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 7.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்திருந்த போது, மறுபடியும் மழை குறுக்கிட்டது. டொனோவன் பெரெய்ரா (25), யான்சென் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
மாறிய இலக்கு
மீண்டும் போட்டி துவங்கியது. இம்முறை 5 ஓவரில், இங்கிலாந்து அணி 69 ரன் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. இங்கிலாந்து அணியின் பில் சால்ட் 'டக்' அவுட்டாக, பெத்தெல் 7 ரன் மட்டும் எடுத்தார். ஹாரி புரூக், கார்பின் போஸ்ச் பந்தில் 'டக்' அவுட்டானார். யான்சென் 'வேகத்தில்' பட்லர் (25) அவுட்டானார்.
இங்கிலாந்து அணி 5 ஓவரில் 54 ரன் மட்டும் எடுத்தது. வில் ஜாக்ஸ் (1), சாம் கர்ரான் (10) அவுட்டாகாமல் இருந்தனர். 'டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி, தென் ஆப்ரிக்க அணி 14 ரன்னில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

Advertisement