'ஓபியம்' போதைப்பொருள் பதுக்கி விற்ற ஜெய்ப்பூர் வாலிபர் கைது

பூக்கடை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.70 கிலோ, 'ஓபியம்' போதைப் பொருளை பதுக்கி விற்பனை செய்த, ஜெய்ப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கைப்பையுடன் சுற்றித்திரிந்த, ஓட்டேரியைச் சேர்ந்த ராகேஷ் குர்ஜார், 29, என்பவரை, பூக்கடை மதுவிலக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவரது பையை பரிசோதித்தபோது, 'ஓபியம்' என்ற போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து, ராகேஷ் குர்ஜாரை போலீசார் கைது செய்தனர்.

அவர், தன் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து ஓபியம் போதைப் பொருளை கடத்தி வந்து, சென்னையில் விற்பது தெரியவந்தது.

இவர் மீது, ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது. அவரிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.70 கிலோ எடையுள்ள ஓபியம் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ராகேஷ் குர்ஜார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement