பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்று சேர முடியுமா... * இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பு * பி.சி.சி.ஐ.,க்கு கடும் எதிர்ப்பு

துபாய்: இந்தியர்களின் நெஞ்சங்களை பதற வைத்த பஹல்காம் பயங்கவராத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்போட்டியை நாட்டுப்பற்றுமிக்க இந்திய ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் பி.சி.சி.ஐ.,க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. தற்போதும் பயங்கவாதத்திற்கு எதிரான 'சிந்துார் ஆப்பரேஷன்' தொடர்வதாக பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளனர்.
பணம் பிரதானம்
ஆனால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மட்டும் பாகிஸ்தானுடன் மறைமுக உறவு கொள்ள விரும்புகிறது. பணம் மட்டும் குறிக்கோளாக கொண்ட சில 'ஸ்பான்சர்கள்', ஒளிபரப்பு நிறுவனங்களும் துணை போகின்றன. ஆசிய கோப்பை தொடரில் வரும் 14ல் நடக்க உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி மூலம் பெரும் லாபம் பார்க்க முயற்சிக்கின்றன.
பஹல்காம் தாக்குதலின் போது முதலை கண்ணீர் வடித்த சில அரசியல்வாதிகளும், பி.சி.சி.ஐ., செயலை கண்டிக்காமல் அமைதியாக உள்ளனர். வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். இம்முறை இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பாக உள்ளனர். பஹல்காம் தாக்குதலின் சோக நினைவுகள் நெஞ்சை உலுக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டியை ரசிக்க தயாராக இல்லை. பெரும்பாலான ரசிகர்கள் இந்தியா -பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். நாட்டுப்பற்று மிக்க ஒவ்வொரு இந்தியரும் இப்போட்டியை புறக்கணிக்க வேண்டும். அன்றைய தினம் 'டிவி'யை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனவெறி பிரச்னை காரணமாக பல ஆண்டுகள் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியுடன் இந்தியா விளையாடவில்லை. இதே போல பயங்கவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை பாகிஸ்தானுடன் எவ்வித கிரிக்கெட்டிலும் நாம் விளையாடக்ககூடாது என்பதே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இது முடியுமா
'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலின் போது, பாகிஸ்தான் பவுலர் பகிம் அஷ்ரப் போன்றோர் இந்திய ராணுவத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். இவர்களுடன் இந்திய வீரர்கள் எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டுமா என கேள்வி எழுந்துள்ளது.

தவறான முடிவு
இந்திய அணி முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறுகையில்,'' பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்திய கிரிக்கெட் போர்டு, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என முடிவு எடுத்திருக்க வேண்டும். இது விளையாட்டு தானே என்றாலும், மறுபக்கம், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அங்குள்ள அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆசிய கோப்பை போட்டியை புறக்கணிக்க வேண்டும்,'' என்றார்.

உறவு தேவையில்லை
இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் கூறுகையில்,''ஆப்பரேஷன் சிந்துாருக்குப் பின், இந்தியா-பாக்., இடையே இனி கிரிக்கெட், வர்த்தக உறவு வேண்டாம் என்றனர். நாங்கள் உலக 'லெஜண்ட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளை புறக்கணித்தோம். என்னைப் பொறுத்தவரை அரசியல், சமூக சூழலில் இரு தரப்பிலான உறவில் முன்னேற்றம் ஏற்படாத வரையில் கிரிக்கெட் போட்டிகள் தேவையில்லை,'' என்றார்.

Advertisement