மக்காச்சோளம் விதைப்பு பணி துவக்கம்
வேப்பூர் : நல்லுார் மற்றும் மங்களூர் ஒன்றிய பகுதியில் பெய்த மழையை பயன்படுத்தி மக்காச்சோளம் விதைப்பு பணி துவங்கியது.
நல்லுார் மற்றும் மங்களூர் ஒன்றியங்களில் 130 கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள் பெரும்பாலும் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, எள், வரகு பயிர்களையும், வெள்ளாறு, கோமுகி, மணிமுக்தா ஆறுகளையொட்டிய மக்கள் நெல், கரும்பு பயிர்களையும் சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நல்லுார் மற்றும் மங்களூர் ஒன்றிய பகுதியில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
தொடர்ந்து, மானாவாரி பயிரான மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது வயல்களை சீரமைத்து, மூன்று முறை உழவு செய்து விதைப்பு பணிக்கு தயார் நிலையில் வைத்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஈரப்பதத்தை பயன்படுத்தி, டிராக்டரில் விதைப்பு இயந்திரம் அமைத்து மக்காச்சோளம் விதைக்கும் பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
கடந்தாண்டு போதிய வருவாய் கிடைக்காத நிலையில், நடப்பாண்டில் அதிக வருவாய் கிடைக்கும் என விவசாய எதிர்பார்ப்பில் உள்ளனர்.