பெண் போலீசுக்கு சரமாரி வெட்டு; போதை கணவன் வெறிச்செயல்

அயனாவரம்; பெண் போலீசை சரமாரியாக வெட்டிய, போதை கணவனை போலீசார் கைது செய்தனர்.

தேனி, ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, 30; காவலர். இவரது கணவர் இளவரசன், 35. இவர்களுக்கு ஏழு வயது மகன் உள்ளார்.

போதை பழக்கத்திற்கு அடிமையான இளவரசன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால், தம்பதி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

தற்போது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'டெக்னிக்கல்' பிரிவில் பணிபுரியும் பாரதி, அயனாவரத்தில் மகனுடன் வசித்து வருகிறார். அதேநேரம், தேனியில் கஞ்சா வழக்கில் கைதான இளவசரன், நான்கு மாதங்களுக்கு முன், சிறையில் இருந்து வெளியில் வந்தார். இந்த நிலையில், பாரதியின் அண்ணன் மணிவண்ணன், தம்பதி இருவரையும் சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக அயனாவரத்தில் உள்ள வீட்டில், சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால், பேசாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இளவரசன், நேற்று அதிகாலை 2:30 மணியளவில், வீட்டில் இருந்த தேங்காய் வெட்டும் அரிவாளால், பாரதியின் தலையில் மூன்று இடங்க ளில் வெட்டியுள்ளார்.

பின், முதுகு, இடது முழங்கை என பல இடங்களில் சரமாரியாக அடித்துள்ளார். வலது கால், தொடைகளிலும் அரிவாளால் சரமாரியாக கொத்தியபடி வெட்டி, பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளார். காயமடைந்த பாரதி வீட்டிருந்து தப்பி, சக ஊழியர்கள் உதவியுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அயனாவரம் போலீசார், இளவரசனை நேற்று கைது செய்தனர்.

Advertisement