லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி

மாதவரம்;மாதவரம் சி.எம்.டி.ஏ., லாரி நிறுத்த வளாகத்தில் மழைநீருடன் கலந்து கழிவு நீரும் தேங்கியுள்ளதால், லாரி ஓட்டுநர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சி.எம்.டி.ஏ., லாரி நிறுத்த வளாகத்திற்கு, தினமும், 800க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. இங்கு, ஓட்டுநர்கள் தங்குமிடமும் உள்ளது. சமீப நாட்களாக பெய்யும் மழையால், இந்த வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.

மேலும், புழல் சிறையிலிருந்து மழைநீர் மூடுகால் வழியாக வெளியேறும் கழிவுநீரும், இந்த லாரிகள் நிறுத்த வளாகம் வழியாக, மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் கலக்கிறது.

இந்த மழை நீர் மூடுகால்வாயின் மேல் மூடிவழியாக நிரம்பி வழியும் கழிவு நீரும், மழைநீருடன் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், லாரியில் இருந்து கீழே இறங்க கூட முடியாமல், ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேங்கி கிடக்கும் கழிவு நீரில் கொசு உற்பத்தியும் அதிகமாகியுள்ளதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.

இதன் அருகே, மாதவரம் மண்டல அலுவலகம் செயல் பட்டு வந்தும், அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement