உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி; பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பைனலுக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20வது சீசன் நடக்கிறது. உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில், ஏ பிரிவில் நீரஜ் சோப்ராவுடன் ஜெர்மனி வீரர் ஜீலியன் வெபர், ஜாகுப் வாடில் (செக்குடியரசு) மற்றும் கெஷோர்ன் வால்காட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு தகுதி பெற்றார். 84.50 மீட்டர் தொலைவை கடந்து ஈட்டியை வீசினால், பைனலுக்கு முன்னேறலாம் என்ற சூழலில், அவர் தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே அந்த தூரத்தை கடந்து வீசி அமர்க்களப்படுத்தினார்.
இதே மைதானத்தில் தான் 2021ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இந்திய வீரர்கள் சச்சின் யாதவ், யாஷ்விர் சிங், ரோகித் யாதவ் ஆகியோரும் இந்தத் தகுதி சுற்றில் பங்கு பெற்ற நிலையில், சச்சின் யாதவ் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
