குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் ரோடு மறியல்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், ராஜாக்காள்பட்டி ஊராட்சி அழகாபுரியில் குடிநீர் வினியோகம் பாதித்ததால் பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர். இக்கிராமத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.

பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் ஆற்றிலிருந்து குடிநீர் வினியோகம் உள்ளது. கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று மாலை பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆண்டிபட்டி - பாலக்கோம்பை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ராஜதானி போலீசார் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Advertisement