அரசியலமைப்பு என்ற பெயரில் வெற்றுக் கூச்சல்; ராகுல் குற்றச்சாட்டு குறித்து பாஜ விமர்சனம்

20

பாட்னா: 'நாட்டின் வாக்காளர்களை ராகுல் அவமதித்து விட்டார். மக்கள் மீண்டும் ஒரு முறை அவருக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள்,' என்று பாஜ தெரிவித்துள்ளது.

ஓட்டு திருட்டு என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இன்று ஹைட்ரஜன் குண்டை வீசப்போவதாக கூறியிருந்தார். அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சில ஆதாரங்களுடன், கால் சென்டர்கள், மென்பொருள் உதவியுடன் ஓட்டு திருட்டு நடந்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் காப்பாற்ற நினைப்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். பீஹார் தலைநகர் பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ராகுலுக்கு அரசியலமைப்பு குறித்து புரிதல் இருக்கிறதா? அவர் உச்சநீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும் சில உத்தரவுகளை பிறப்பித்தது. ராகுலுக்கு சட்டமோ, நீதிமன்ற உத்தரவுகளோ புரியவில்லை என்று நினைக்கிறேன்.

சும்மா, அரசியலமைப்பு, அரசியலமைப்பு என்று கூச்சலிடுகிறார்.ராகுலுக்கு மக்கள் ஓட்டளிக்காததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அவரது செயல்களை இந்த தேசம் மறக்காது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு ஒரு மதிப்பு உள்ளது. நாட்டின் வாக்காளர்களை அவர் அவமதித்துள்ளார்.

மக்கள் மீண்டும் ஒரு முறை அவருக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள். அவரின் அனைத்து குண்டுகளும் செயல் இழந்து போகும். அவர் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன், இவ்வாறு கூறினார்.

Advertisement