நாட்டு வெடி வெடித்து 4 பேர் படுகாயம்

உத்தனப்பள்ளி, உத்தனப்பள்ளி அருகே, மாட்டு கொட்டகையில் இருந்த நாட்டு வெடி வெடித்து, தம்பதி உட்பட, 4 பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே தேவசானப்பள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி, 35. இவரது மனைவி புஷ்பா, 30. அப்பகுதியில் கொட்டகை அமைத்து மாடு வளர்த்து வருகின்றனர்.
கோவில் திருவிழாவிற்காக, கொட்டகையில் சில நாட்டு வெடிகள் வைத்திருந்தனர். நேற்று மாலை கொட்டகையில் வைத்து, ஆட்டு கால்களை சுட்டு கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகள் வெடித்து சிதறின.
இதில், பெரியசாமி, அவரது மனைவி புஷ்பா மற்றும் அவர்களது உறவினரான அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் சரண், 13, மற்றும் ஹரிஷ், 30, ஆகிய, 4 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பள்ளியில் நேற்று தேர்வு நடந்ததால், மதியத்திற்கு பின் வீட்டிற்கு வந்த சரண், பெரியசாமி கொட்டகைக்கு சென்றபோது, வெடி வெடித்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement