உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண இந்தியா தயார்; நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிரதமர் மோடி

புதுடில்லி: உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், ரஷ்யா உடனான உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் இன்று பிரதமர் மோடியிடம் 75வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது தலைமைத்துவத்தையும், உலகளாவிய அந்தஸ்தையும் பாராட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
எனது 75வது பிறந்தநாளில் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும்
எனது நண்பர் அதிபர் புடினுக்கு நன்றி. இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தனது பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த மாதம் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது புடின் மற்றும் பிரதமர் மோடி சந்தித்துக் கொண்டனர். தற்போது பிறந்தநாளுக்கு புடின் வாழ்த்து தெரிவித்திருப்பது இந்தியா-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையான உறவு வளர்ந்து வருவதை எடுத்துரைக்கிறது.
