மகாவ் கிளிகள் தோளோடு

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது டெப்போக் நகரம்.
மக்கள் நெரிசலாலும் நகர வாழ்க்கையின் அலைமோதலாலும் பிரபலமானது. அந்த நகரின் பசுமை சூழ்ந்த வயல்வெளியில் ஒரு வித்தியாசமான காட்சி நிகழ்ந்தது. அல்பி அல்பர் ராம்லி என்ற பறவை விரும்பி, தனக்கு சொந்தமான வண்ணமயமான மகாவ் கிளிகளை அங்குள்ள திறந்த வெளியில் பறக்கவிட்டார்.
சூரியன் மறையும் வேளையில், வயல்வெளியின் பசுமைக்கு நடுவே வானில் எழுந்த மகாவ் கிளிகள், வண்ணங்களால் வரையப்பட்ட மேகங்கள் போலத் தெரிந்தன. அங்கு கூடியிருந்தோர், அவற்றின் ஒவ்வொரு அசைவையும், பறக்கும் அழகையும் பார்த்து கைதட்டி வரவேற்றனர்.
மகாவ் கிளிகள் என்பது தென் அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய கிளி வகைகளில் ஒன்றாகும். நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை என வானவில் நிறங்களைத் தாங்கிய பளபளப்பான இறகுகளே இவற்றின் அடையாளம். மிகுந்த அறிவாற்றலும், பேசும் திறனும் கொண்டவை. மனிதர்களுடன் மிக விரைவில் பழகி, சொல்வதைக் கேட்கக்கூடியவை.
அல்பி சிறு வயதிலிருந்தே பறவைகளிடம் ஈர்க்கப்பட்டவர். அவர் மகாவ் கிளிகளை செல்லப்பிராணிகள் போல கூண்டில் பூட்டி வைத்துக்கொள்ளவில்லை. மாறாக, அவற்றை திறந்த வெளியில் பறக்கவிட்டு, பின் கூட்டுக்கு திரும்பும் திறன் கற்றுக்கொடுத்துள்ளார்.
வானில் பறக்கவிடப்பட்ட கிளிகள், அவர் விசில் ஒலி எழுப்பியதும் வானத்தில் பறப்பதை விட்டுவிட்டு சமர்த்தாக அவரது தோளில் வந்து உட்காருகின்றன.
“இது எப்படி சாத்தியம்? சர்க்கஸா? அல்லது மந்திரமா?” என்று மக்கள் வியந்தனர்.
டெப்போக் நகர மக்கள், வயல்வெளியில் இந்தக் காட்சியைப் பார்க்க கூட்டம் கூட்டமாக திரண்டனர். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கைகளை ஆட்டினர். புகைப்படக் கலைஞர்கள், அந்த பறவைகள் வானில் வண்ணச் சிறகுகளை விரித்து பறக்கும் அழகை விதவிதமாக படம் பிடித்தனர்.
மகாவ் கிளிகள் அழிந்து வருவதாகவும், அவற்றை பாதுகாக்கும் விழிப்புணர்வு வேண்டி இவ்வாறான திறந்த வெளி நிகழ்வை தான் நடத்துவதாகவும் அல்பி கூறினார்.
ஆனால் பறவை ஆர்வலர்கள், அவரது கருத்தில், செயலில் இருந்து மாறுபடுகின்றனர்.
இயற்கை வாழ்விடங்களில் அல்லாமல், நகர சூழலில் பறவைகளை பயன்படுத்துவது அதன் இயல்பான வாழ்க்கையை மாற்றுகிறது.
என்னதான் கிளிகளை சுதந்திரமாக பறக்கவிட்டாலும், மீண்டும் வரவழைத்து கூண்டில்தானே அடைக்கிறார். “இங்கே எங்கே வந்தது பறவைகளுக்கான சுதந்திரம்?” என்கிறார்கள்.
மேலும், இவற்றை அதிகமாக பிடித்து அடிமைப்படுத்தி, வணிக நோக்கோடு பயன்படுத்துவது காட்சிப்படுத்துவது - இவற்றை சுதந்திரத்தோடு ஒப்பிடவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது என்கின்றனர்.
மகாவ் கிளிகள் வானில் பறக்கும் காட்சி எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்கு பின்னால் மனிதனின் கட்டுப்பாடு, வணிக உந்துதல், விலங்கு உரிமை கேள்விகள் மறைந்து கிடக்கின்றன.
மகாவ் கிளிகளை உண்மையிலேயே பாதுகாக்கிறோம், நேசிக்கிறோம் என்பவர்கள், அவற்றை கூண்டிலிருந்து அவ்வப்போது திறந்து விடுவதைவிட, அதன் வாழ்விடத்தில் வாழவிட்டு ரசிப்பதே சரியானது என்கின்றனர்.
- எல். முருகராஜ்
மேலும்
-
தேங்காய் வியாபாரி வீட்டில் 6 பவுன் நகை, பணம் திருட்டு
-
ஊதிய உயர்வு கூட்டுறவு ஊழியர்கள் வலியுறுத்தல்
-
ஆண்டுக்கணக்கில் சாலையில் தேங்கும் கழிவுநீர் அதிகாரிகள் நடவடிக்கை இல்லையென புகார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
-
நாட்டு வெடி வெடித்து 4 பேர் படுகாயம்
-
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் குறும்படம் திரையிட உத்தரவு