இந்தியா - ரஷ்யா உறவை நாங்கள் விரும்பவில்லை; ஐரோப்பிய யூனியன்

புதுடில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் தடைகள் காரணமாக, இந்தியா, ரஷ்யா பக்கம் செல்வதை நாங்கள் விரும்பவில்லை என்று ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கை தலைவர் கஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பேச்சு, கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்தது. ஒரு சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, 2013ல் இந்த பேச்சு நிறுத்தப்பட்டது. பின், கடந்த 2022 ஜூனில் மீண்டும் துவங்கியது. இந்த ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தும் விதமாக, இந்தியா மற்றும் சீனாவுக்கு 100 சதவீத வரியை விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜி 7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த சூழலில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.
இது குறித்து ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கை தலைவர் கஜா கல்லாஸ் கூறியதாவது; இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து இல்லை. இது இருதரப்புக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்புக்கு தடைகளாக உள்ளன. ஐரோப்பிய யூனியனை பொறுத்தவரையில் இந்தியா நம்பிக்கைக்குரிய நாடாக இருக்கிறது. இந்த தடைகள் காரணமாக, இந்தியா, ரஷ்யா பக்கம் செல்வதை நாங்கள் விரும்பவில்லை.
இந்த வெற்றிடத்தை வேறு யாராவது நிரப்புவார்கள் என்று விட்டு விடுவதா? அல்லது அதை நாமே நிரப்ப முயற்சிப்பதா? என்பதே கேள்வியாக உள்ளது, எனக் கூறினார்.
முன்னதாக, ஐரோப்பிய யூனியன் இன்று வெளியிட்ட ஆவணத்தில், ரஷ்யாவின் ராணுவத்தைக் குறைப்பது மற்றும் ஐரோப்பிய யூனியன் தடைகளைத் தவிர்ப்பதைத் தடுப்பது குறித்து இந்தியாவுடன் மேலும் இணைந்து செயல்படும் என தெரிவித்திருந்தது.
இந்தியா - ரஷ்யா இடையிலான உறவில் நெருக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



மேலும்
-
நாட்டு வெடி வெடித்து 4 பேர் படுகாயம்
-
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் குறும்படம் திரையிட உத்தரவு
-
21 மாவட்டங்களில் இன்று கனமழை
-
சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் 'டெட்' தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்
-
சட்டசபையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதால் கைவிட முடிவு
-
கூட்டுறவு வங்கியில் நகை கடன் வாங்குவோர் அதிகரிப்பு பின்னணி