'இரிடியம்' விவகாரத்தில் ரூ.1,000 கோடி மோசடி முக்கிய புள்ளியிடம் போலீசார் விசாரணை
சென்னை:ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, 'இரிடியம்' முதலீடு தொடர்பாக, 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பதால், முக்கிய புள்ளி ஒருவரை மூன்று நாள் காவலில் எடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. 'இந்த இரிடியத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் தரப்படும்' என, தமிழகம் முழுதும், 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது.
இதற்காக மோசடி கும்பல்கள், ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் வாயிலாக அறக்கட்டளைகளை துவங்கி உள்ளனர்.
இந்த அறக்கட்டளைகள் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்தால், அரசுக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை என்பதால், அதன் வாயிலாக மோசடி நடந்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழக காவல் துறையின் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, பண மோசடி குறித்து, 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் சிக்கிய நபர்கள் தொடர்பாக, கடந்த 12ல், தமிழகத்தில் 43, வெளி மாநிலங்களில் நான்கு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இரிடியம் முதலீடு மோசடியில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சாமிநாதன், வேலுர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ஜெயராஜ் உட்பட, 30 பேரை கைது செய்துள்ளனர்.
தொடர் விசாரணையில், இரிடியம் முதலீடு தொடர்பாக, 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதை உறுதி செய்ய, முக்கிய புள்ளியான சாமிநாதனை, 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சாமிநாதனை, மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்
-
மகாளய அமாவாசை: புனித நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
-
அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்
-
மோடி- சரத் பவார் இடையே தொடரும் அரசியல் நட்பு
-
முன்னேற்றம் தருமா மூவர் உலா?
-
ஐ.நா. கூட்டத்தில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர்: டிரம்ப் ஆவல்