போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு: இந்தியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு

4

புதுடில்லி: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இதன்படி, அந்த கடத்தலில் தொடர்பு என சந்தேகப்படும் இந்தியாவைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு விசா மறுக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போதைப்பொருள் ஆபத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு என்ற அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் விசாவை மறுத்துள்ளது. இந்த முடிவு காரணமாக, அந்த தனிநபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க முடியாது.

சட்டவிரோத கடத்தலை தடுக்க தூதரகம் உறுதிபூண்டுள்ளது. இந்த சட்டவிரோத போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு கடத்தும், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அமெரிக்காவுக்கு செல்லத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறோம். இந்த சவாலை எதிர்கொள்வதில் இந்திய அரசின் ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இரு நாட்டு அரசுகளும் இணைந்து செயல்படும்போதுதான், போதைப்பொருளில் இருந்து நமது மக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


அதேநேரத்தில் யார் யாருக்கு விசா மறுக்கப்பட்டு உள்ளது என்ற தகவலை அமெரிக்க தூதரகம் வெளியிடவில்லை. இது குறித்து மத்திய அரசு சார்பில் இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, போதைப்பொருட்கள் கடத்தும் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், சீனாவுடன் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெளியிடப்பட்ட 23 நாடுகளின் பெயர் பட்டியலிலும் இந்தியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement