ஜெய் மீனா-ஆத்யா 'வெண்கலம்': ஆசிய 'சாப்ட்' டென்னிசில் அபாரம்

சியோல்: ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஜெய் மீனா, ஆத்யா திவாரி ஜோடி வெண்கலம் வென்றது.

தென் கொரியாவில், ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா, ஆத்யா திவாரி ஜோடி, தென் கொரியாவின் ஹைகியோங் முன், கிம் பீம்-ஜூன் ஜோடியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய ஜோடி, 2-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஜெய் மீனா வெண்கலம் வென்றிருந்தார்.
தவிர இது, ஜெய் மீனா-ஆத்யா திவாரி ஜோடி சர்வதேச அரங்கில் கைப்பற்றிய 2வது பதக்கம். ஏற்கனவே கடந்த ஆண்டு சீனாவில் நடந்த உலக 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றிருந்தது.

Advertisement