தி.நகர் புதிய மேம்பால பணிகள் நிறைவு உறுதித்தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு

தி.நகர் : போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, 131 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி, 2023 மார்ச்சில் துவக்கியது.

இதன்படி, தி.நகர், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் இருந்து, தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலம், 50 இரும்பு துாண்களுடன், 7.5 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த அருள் ஜெயச்சத்திரன் தலைமையிலான வல்லுநர்கள் குழு, மேம்பாலத்தின் உறுதி தன்மையை நேற்று சோதனை செய்தது.

மேம்பாலத்தில், 20 டன் லாரி ஒன்றை, 20, 30, 40 கி.மீ., வேகத்தில் ஓட்டி, அதன் உறுதியை சோதனை செய்தனர். அத்துடன், திடீரென பிரேக் அடிக்கும் போது, ஏற்படும் அதிர்வுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், தலா 3 டன் கான்கிரீட் கட்டமைப்புக்களை படிப்படியாக, 152 டன் வரை மேம்பாலத்தில் 24 மணி நேரம் வைத்து, தாங்கும் திறன் ஆய்வு செய்யப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தி.நகர் புதிய மேம்பாலத்தில் படிப்படியாக எடை அதிகப்படுத்தும் கட்டமைப்புகளை வைத்து, உறுதித்தன்மை சோதனை செய்யப்பட்டது.

உறுதித்தன்மைக்கான அடுக்கப்பட்ட கட்டமைப்புகள், 24 மணி நேரத்திற்கு பின், படிப்படியாக அகற்றப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேம்பாலம் 100 சதவீதம் உறுதியாக உள்ளது. மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தபின், 15 நாட்களுக்கு மேல் மேம்பாலத்தில் இருந்து சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்படும்.

அது மேம்பாலத்தின் சுமையை தாங்க அமைக்கப்பட்டுள்ள 'பாலம் தாங்கி' அமைப்பு ஸ்திரத்தன்மை ஆகும் வரை, இந்த சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்படும். அதற்காக வகான ஓட்டிகள் பயப்பட தேவையில்லை.

இவ்வாறு கூறினார்.

Advertisement