இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி: 'யூத்' ஒருநாள் தொடரில் அபாரம்

பிரிஸ்பேன்: மூன்றாவது 'யூத்' ஒருநாள் போட்டியில் இந்திய அணி 167 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'யூத்' ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
வேதாந்த் அபாரம்: மூன்றாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (16), கேப்டன் ஆயுஷ் மாத்ரே (4) சுமாரான துவக்கம் கொடுத்தனர். விஹான் மல்ஹோத்ரா (40) நம்பிக்கை தந்தார். வேதாந்த் திரிவேதி (86), ராகுல் குமார் (62) அரைசதம் கடந்தனர்.
இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 280 ரன் எடுத்தது. கிலான் படேல் (20) அவுட்டாகாமல் இருந்தார்.
கிலான் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் டர்னர் (38), டாம் ஹோகன் (28) ஆறுதல் தந்தனர். அலெக்ஸ் லீ யங் (4), ஸ்டீவன் ஹோகன் (9), கேப்டன் வில் மலாஜ்சுக் (15) ஏமாற்றினர். ஆஸ்திரேலிய அணி 28.3 ஓவரில் 113 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் கிலான் படேல் 4, உத்தவ் மோகன் 3, கனிஷ்க் சவுகான் 2 விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.