கிராமங்களை புறக்கணிக்கும் அரசு பஸ்கள் விவசாயிகள் புகார்: விசாரணைக்கு உத்தரவு

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கிராமங்களில் அரசு பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படுவதே இல்லை என கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். அதிருப்தியான கலெக்டர், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார்.

கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, கலெக்டர் பி.ஏ., (வேளாண்) தனலட்சுமி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார் குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

விஸ்வநாதன் , (இந்திய கம்யூ.,) சிவகங்கை: வி.மலம்பட்டியில் இயங்கும் வாழை மண்டியில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாழை தார்களை வாங்கி ஏமாற்றுகின்றனர். அரசே வாழை விற்பனை மையம் துவக்க வேண்டும்.

கலெக்டர்: அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும்.

கன்னியப்பன் , இளையான்குடி: கீழாயூர், மேலாயூர் கண்மாய்களை துார்வாரி, வரத்து கால்வாய்களை செப்பனிட வேண்டும்.

கிருஷ்ணன் , மானாமதுரை : பல முறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் செய்தும் பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை.

கலெக்டர் : பெரும்பாலான புகார்கள் அரசு போக்குவரத்து கழகம் மீது தான் வருகிறது. எனது தலைமையில், போக்குவரத்து கழக பொது மேலாளர், மேலாளர், அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

சின்னகண்ணு , மறவமங்கலம்: மறவமங்கலம் அருகே பளூவூர் பாப்பான் கண்மாய் 120 ஏக்கர் பரப்பளவில் இருந்ததை ஆக்கிரமித்து விட்டனர். இன்றைக்கு அந்த கண்மாயையே காணவில்லை.

திருவாசகம் , மாரந்தை: சிவகங்கை ஊத்திக்குளம் முதல் மாரந்தை கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமித்து விட்டனர். இதனால் நாட்டார் கால்வாயில் இருந்து உபரி நீர் மாரந்தை கண்மாய்க்கு வருவதில்லை.

சூசைமாணிக்கம் , தேவகோட்டை: விவசாய மின்மோட்டாருக்கு இலவச மின் இணைப்பு கேட்டு 2013ல் விண்ணப்பித்தேன். தேவகோட்டை உதவி பொறியாளர், மின் இணைப்பு வழங்க வரும்போது நான் வெளியூர் செல்வதாக நானே கடிதம் எழுதி கொடுத்தது போல், போலியாக கடிதம் எழுதி வைத்து, எனக்கு வந்த மின் இணைப்பை மற்றவருக்கு வழங்கிவிட்டார். உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்வாரிய அதிகாரி: இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பெயர் பட்டியலில் உள்ளதால், செப்., இறுதிக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.

ராதாகிருஷ்ணன், பெரியகண்ணனுார்: பெரியகண்ணனுார் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தரமாக செயலர் இன்றி, விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

ராஜேந்திர பிரசாத் , இணைபதிவாளர்: ஒரு வாரத்திற்குள் நிரந்தர செயலர் நியமிக்கப்படும்.

கிருஷ்ணன் , வழக்கறிஞர், கீழப்பூங்குடி:

விவசாய குறைதீர் கூட்டத்தில் அத்துறை சார்ந்த புகார்களை மட்டுமே தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். அதே போன்று அனைத்து விவசாயிகளும் பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும். ஒரே தரப்பினர் பேச வாய்ப்பு தருவதை தவிர்க்கவேண்டும்.

கலைவாணி , சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகமூர்த்தி பெருமாள் கோவிலுக்கு நேர்த்தியாக ஆயிரக்கணக்கான மாடுகளை விடுவதால், விவசாய நி லங்களுக்குள் பயிர்களை அழிக்கிறது. இவற்றை தனியாக அடைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

@block_B@

அடிக்கடி மின்வெட்டு

விவசாயிகள் குறைதீர் கூட்ட அரங்கில், 'மைக்குகள்' சரியாக வேலை செய்யவில்லை. மேலும், அடிக்கடி கூட்ட அரங்கில் மின்வெட்டு ஏற்பட்டதால், கலெக்டர் அதிருப்தி அடைந்தார். அங்கிருந்த விவசாயிகள், மின்வாரியத்தின் மீது புகார் தெரிவித்தனர். அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகள், கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் உள்ள மின்சாதனங்களில் ஏதேனும் பிரச்னை இருக்கும். மின்வாரிய பிரச்னை இல்லை என தெரிவித்தார். பின்னர் எலக்ட்ரீசியன் வந்து மின்பழுதை சரி செய்தனர்.block_B

Advertisement