'விபத்தில்லா கோவை' உருவாக்குவது... சாத்தியமே! அக். 5ல் 'உயிர்' சார்பில் 'ரன் அண்ட் வாக்'

கோவை: 'விபத்தில்லா கோவை'யை உருவாக்கும் விதமாக, உயிர் அமைப்பு சார்பில், அக்., 5ல் 'ரன் அண்ட் வாக்' என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.




கோவையில் வாகன விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. விபத்துகளை தவிர்க்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உயிர் அமைப்பு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசாருடன் இணைந்து, 'நான் உயிர் காவலன்' என்கிற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. பிரசாரத்தின் முக்கிய அம்சமாக, 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைக்கும் நிகழ்வு நடக்கிறது. அக்., 6 முதல் ஒரு வாரத்துக்கு, 'விபத்தில்லா கோவை' எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



பொதுமக்களின் பங்களிப்பு அதிகளவில் இருக்க, 'ரன் அண்ட் வாக்' எனும் நிகழ்ச்சி, அக்., 5ல் நடத்தப்படுகிறது. 5 கி.மீ., 3 கி.மீ., மற்றும், 1 கி.மீ., ஓட்டப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதுதவிர, ஒரு கி.மீ., நடைபோட்டியும் நடக்கிறது.



நேரு ஸ்டேடியத்தில் துவங்கும் 5 கி.மீ., ஓட்டம், ரேஸ்கோர்ஸ் வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியத்தில் நிறைவடையும். மூன்று கி.மீ., ஓட்டம் நேரு ஸ்டேடியத்தில் துவங்கி, கலெக்டர் பங்களா வழியாக, மீண்டும் நேரு ஸ்டேடியத்தில் முடிவடைகிறது.



ஒரு கி.மீ., ஓட்டம் மற்றும் ஒரு கி.மீ., நடை போட்டி நேரு ஸ்டேடியத்தின் வெளிவட்ட ரோட்டில் நடக்கிறது. காலை 5.45 மணிக்கு 5 கி.மீ., காலை 6 மணிக்கு 3 கி.மீ., காலை 6.15 மணிக்கு, ஒரு கி.மீ., காலை 6.30 மணிக்கு ஒரு கி.மீ., நடைபோட்டி நடைபெறும். அனுமதி இலவசம். பங்கேற்க விரும்புவோர், 30ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். அனைத்து தரப்பினரும் கைகோர்த்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால், விபத்தில்லா கோவை சாத்தியமே.

Advertisement