இபிஎஸ் பிரசாரத்துக்கு கொடுத்ததை விட விஜய்க்கு அதிக பாதுகாப்பு தரப்பட்டது; ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

கரூர்: கரூரில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பிரசாரத்திற்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை விட, தவெக தலைவர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக கலெக்டர் தங்கவேலு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கரூர் கலெக்டர் தங்கவேலு பேசியதாவது; கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 40 பேர் உயிரிழந்தனர். இது அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை கண்காணிக்க திருச்சி, திண்டுக்கல் கலெக்டர்கள் முதல்வரின் உத்தரவின் பேரில் கரூர் வந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு திருச்சி, சேலம், திண்டுக்கல், நாமக்கல், கோவை மற்றும் மதுரையில் இருந்து 114 மருத்துவர்கள், 23 நர்ஸ்கள் வந்தனர். தடயவியல் நிபுணர்கள் பிற மாவட்டங்களில் இருந்து 16 பேரும், கரூரில் 4 பேரும் இதற்கான பணிகளை செய்தனர். உதவி தேவைப்படுவோருக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, என்றார்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாவது;செப்.,23ம் தேதி தவெகவினர் கொடுத்த மனுவில் லைட்ஹவுஸ் ரவுன்டானாவில் அனுமதி கேட்டனர். அது மிகவும் ஆபத்தான பகுதி. அங்கு பெரிய பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு மற்றும் மேம்பாலம் உள்ளது. அதிக கூட்டம் சேரும் அபாயம் இருந்ததால் அந்த இடம் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு, உழவர் சந்தை மைதானத்திற்கு அனுமதி கேட்டனர். அதுவும் குறுகலான பகுதி. இதுபோன்ற கூட்டத்தை சமாளிப்பது கடினம். போலீசார் பரிந்துரையின் பேரில், தவெகவினர் மனு கொடுத்து, வேலுசாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தவெக நிகழ்ச்சிக்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரூரில் தவெக பிரசாரத்திற்கு ஒரு எஸ்பி., 3 ஏடிஎஸ்பி.,க்கள், 4 டிஎஸ்பி.,க்கள், 17 இன்ஸ்பெக்டர்கள், 58 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். ஐஜி., கண்காணிப்பில் இருந்தார். இதேபோல், திருச்சி பிரசாரத்தின் போது 650 போலீசாரும், அரியலூரில் 287, பெரம்பலூரில் 480, நாகையில் 410, திருவாரூரில் 413, நாமக்கல் 279 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரசாரத்தில் நெரிசல் ஏற்படுவதை அறிந்த போலீசார் ஆம்புலன்சை வரவழைத்தனர். அங்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எந்த கல்வீச்சு சம்பவமும் நடக்கவில்லை. தவுட்டு பாளையத்தில் இருந்து கரூர் ரவுன்டானாவுக்கு விஜய் வருவதற்கு 2 மணிநேரம் ஆனது. ஏற்கனவே, நாமக்கல்லில் பிரசாரத்தில் 4 மணிநேரம் தாமதமானது. இதனால், காத்திருந்த மக்களுக்கு ஹீட் ஸ்டிரோக் வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
4.15 மணிக்கு தவுட்டு பாளையத்தில் இருந்து விஜய் கிளம்பியுள்ளார். கரூர் ரவுன்டானாவுக்கு 6 மணிக்கு வருகிறார். அப்போது, மக்களை பார்த்து கை அசைத்து வந்த விஜய் மீண்டும் வண்டிக்குள் சென்றார். இதனால் அவரை பார்ப்பதற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. அவரை பின் தொடர்ந்து வந்த கூட்டமும் வண்டி கூடவே போனார்கள். விஜய் பேசும் இடத்திற்கு செல்ல 1 மணிநேரம் ஆகியுள்ளது. விஜய்யை பார்ப்பதற்காக இரு பக்கமும் கூட்டம் நகர்ந்த போது, ஏதே ஒன்று நடந்துள்ளது. அது பற்றி தான் விசாரித்து கண்டு பிடிக்க வேண்டும்.
கரூரில் இபிஎஸ் அதே இடத்தில் பிரசாரம் செய்தபோது 137 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த கூட்டம் கட்டுப்பாட்டுடன் இருந்தது. விஜய் பிரசாரத்திற்கு 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். கூட்டத்தில் இருக்கும் தலைவரின் ஒத்துழைப்பு போலீசாருக்கு அவசியம். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விசாரணை நடத்தி, உண்மையை அறிவிப்பதே சரியாக இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
மின்வாரியம் விளக்கம்
விஜய் பிரசாரத்தின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அனைத்து புகைப்படங்களிலும் தெருவிளக்குகள் ஒளிர்வது தெளிவாக இருக்கையில், விஜய் உரையின் போது மின்தடை என்பதை திட்டவட்டமாக மறுக்கிறோம் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து, கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி கூறியதாவது:
* விஜய் பிரசாரத்தின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அனைத்து புகைப்படங்களிலும் தெருவிளக்குகள் ஒளிர்வது தெளிவாக இருக்கையில், விஜய் உரையின் போது மின்தடை என்பதை திட்டவட்டமாக மறுக்கிறோம்.
* கூட்ட நெரிசல் காரணமாகவே அவர்களின் Focus Light அணைந்துபோனது.
* விஜய் நிகழ்விடத்திற்கு வருவதற்கு முன்பு, அந்த இடத்தில் சில நேரம் மின்தடை இருந்தது உண்மைதான். கூட்டத்தில் இருந்தவர்கள் மரத்தில் சிலர் ஏறிய போதும், மின்மாற்றி மீது ஏறிய போதும் மின்தடை செய்தோம்.
* எங்கே கிளை முறிந்து லைனில் விழுந்துவிடுவார்களோ, அப்படியாகிவிட்டால் பிரச்னை சீரியஸாகிவிடுமே என்ற அச்சத்தில் போலீசார் உதவியோடு அவர்களை விரைந்து நாங்கள் மீட்டோம்.
* இதற்கிடையே மின்தடை இருந்ததுதான். மரத்திலிருந்து, மின்மாற்றியிலிருந்து அவர்கள் இறங்கிவிடப்பட்ட பின் அங்கு மின்சாரம் மீண்டும் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.











மேலும்
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அரசுக்கு இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்
-
கரூர் துயரம்: போலீசாரின் அறிவுரைகளை தவெகவினர் ஏற்கவில்லை; அரசு அதிகாரிகள் பேட்டி
-
பீஹார் தேர்தல் களம் சூடுபிடித்தது; இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: விரைவில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு
-
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு
-
பாக் துணை ராணுவப் படை தலைமையகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு: 10 பேர் பலி
-
சங்குமுகத்தில் உயிரிழந்த கடல் ஆமை