ரியல் எஸ்டேட் புரோக்கரை வெட்டிய 4 பேர் சிக்கினர்

திருச்சுழி:மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரை, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி, அவரையும் அவரது தந்தையையும் கடத்திய சம்பவத்தில், 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், கடச்சனேந்தலை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் மைக்கேல், 42. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே குருந்தகுளம் கிராமத்தில், அருப்புக்கோட்டையை சேர்ந்த மீரா என்பவரிடம், 50 ஏக்கர் நிலம் வாங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு நிலத்தை, தந்தை ஆரோக்கியசாமி, 77, உடன் காரில் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக டூ - வீலர்களில் வந்த நான்கு பேர் மைக்கேலிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி, அவரையும், தந்தையையும் அவர்களின் காரிலேயே அகத்தாகுளம், ஆனைகுளம் வழியாக கடத்தி சென்றனர்.
பின், அங்குள்ள காட்டுப்பகுதியில் காருடன் அவர்களை விட்டுவிட்டு, அவர்களிடமிருந்து, 20,000 ரூபாய் பணத்தை பறித்து, காரின் பின்னால் வந்த அவர்களின் டூ - வீலர்களில் தப்பினர்.
திருச்சுழி போலீசார் விசாரித்து, திருச்சுழி அருகே செம்பொன் நெருஞ்சியை சேர்ந்த லட்சுமணன், 25, வீரசூரன், 27, விமல், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நால்வரை கைது செய்தனர்.