நாடு 50 ஆண்டுகளாக தவறவிட்ட துறை

புதுடில்லி: தொழில் துறை வளர்ச்சியின் முக்கிய அத்தியாயம், இயந்திர உற்பத்தி. அதை நம் நாடு நீண்ட காலம் புறக்கணித்து வந்தது. இப்போது இயந்திரங்கள், துல்லியமான உதிரிபாகங்கள், துணிச்சலான தொழில் முனைவோர் ஆகியோரின் முயற்சியால், அந்த அத்தியாயம் மீண்டும் எழுதப்படுகிறது.
இயந்திரங்கள் தான் உற்பத்தியின் இதயம். அவை உருவாக்கும் பொருட்களே நம் தொழில்கள், நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களை இயக்குகின்றன. ஆனால், 1950களில், 'ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்' துவங்கியபோதும், இந்தியாவின் இயந்திர உற்பத்தி துறை நின்று போனது.
மேக் இன் இந்தியா உயர்தர உதிரிபாகங்களுக்கு இறக்குமதியையே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் தேசிய முக்கியத்துவம் அளித்த இடத்தில், இந்தியா முதலீடு செய்யவில்லை.
சுதந்திரம் பெற்ற பின், இந்தியா விவசாயத்திலிருந்து நேரடியாக சேவை துறைக்கு தாவியது. ஜி.டி.பி.,யில் 16 - 17 சதவீதம் மட்டுமே தயாரிப்பு துறை இருந்தது. 25 - 30 சதவீதம் வரை எட்டிய பிற நாடுகளைப் போல வளர்ச்சி பெறவில்லை. இயந்திர உற்பத்தி எனும் தவிர்க்க முடியாத கட்டம் தவறிப்போனது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தயாரிப்பு துறையை நோக்கிய மாற்றம் துவங்கியது. 'மேக் இன் இந்தியா' உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டங்கள், ஆத்ம நிர்பர் பாரத், விக்சித் பாரத் - 2047 என தொடர் முயற்சிகளால், இடைவெளி நிரம்புகிறது.
பெங்களூரு, ராஜ்கோட், புனே, கோவை, ஹரித்துவார் போன்ற நகரங்கள், இயந்திர உற்பத்தியில் புதிய மையங்களாக உருவாகின்றன. ஐ.எம்.டி.எம்.ஏ., நடத்தும் 'இம்டெக்ஸ்' போன்ற ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சிகள் துவங்கின. இது, இந்தியாவின் சிதறிய தயாரிப்புத் துறையின் முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவுகிறது.
புதிய வேகம் தயாரிப்பு துறை வேகம் பெறும் அதே நேரத்தில், தரமான, அதிலும், உலகத் தரமான பொருட்கள் தயாரிப்பு தான், உலக சந்தையில் நம் நாட்டின் தயாரிப்புகளுக்கு முக்கிய இடத்தை பெற்று தரும் என்பதை உணர வேண்டிய தருணம் இது. இதையே அரசி ன் அண்மை செயல்பாடுகளும் உணர்த்துகின்றன.
தரக் குறியீடுகள், தரக் கட்டுப்பாடு விதிகள், தரப் பரிசோதனைகள் ஆகியவற்றில் அரசின் கவனம் திரும்பியிருப்பது வரவேற்கத்தக்கது. இது, இந்தியர்கள் செலவிடும் பணத்துக்கு ஏற்ப பொருட்களின் உழைப்பை நீட்டிக்கச் செய்யும். ஹரித்துவார் துவங்கி டில்லி வரை, பொருட்கள் தயாரிப்பில் புதிய வேகம் காணப்படுகிறது. சிறு தொழில்களாக பலரும் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.
செயலிகள் உள்ளிட்ட சேவை துறைக்கான புத்தொழில்களில் ஏற்பட்ட வேகம், தற்போது நிலைத்தன்மையை எட்டி, இளைஞர்களின் கவனம் தயாரிப்பு துறை பக்கம் திரும்பச் செய்திருக்கிறது.
இது, நம் நாடு கடந்த 50 ஆண்டுகளாக தவறவிட்ட ஒரு துறையை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல் படி எனலாம்.
இது, பெரும் சத்தமுள்ள புரட்சி அல்ல, ஆனால், சாப்ட்வேர் எனப்படும் மென்பொருள் ஆதிக்கம் மற்றும் ஹார்டுவேர் எனப்படும் வன்பொருள் அபரிமித தேவைக்கு இடையே, சமநிலையைக் கொண்டு வரும் முக்கிய முன்னேற்றமாகும்.
இளைஞர்களின் கவனம், இப்போது சேவை துறையிலிருந்து தயாரிப்பு துறை பக்கம் திரும்புகிறது
