இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது; கரூர் துயரம் பற்றி நிர்மலா சீதாராமன் பேட்டி

13

கரூர்: ''இனி இது போன்ற ஒரு சம்பவம் நாட்டில் நடக்கவே கூடாது,'' என்று நெரிசலில் சிக்கி, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் நேரில் சந்தித்தார். சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது;

சமூக வலைதளங்கள் மூலம் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கலை தெரிவித்தோம். நேற்றிரவு பிரதமர்,உள்துறை அமைச்சர் இருவரும், மத்திய அமைச்சர் முருகன் மற்றும் என்னையும் தனிப்பட்ட முறையில் சென்று பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மனநிலை

மருத்துவமனையில் அட்மிட் ஆனவர்களையும் பார்த்து சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது என்பதை விசாரிக்கவும் கூறினர். உடனடியாக தாம் வர விரும்புகிற மனநிலை இருந்தாலும் வரக்கூடிய சூழ்நிலை இல்லாத காரணத்தினால் எங்கள் இரண்டு பேரையும் பிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை கலெக்டர் காட்டினார். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் சிலரை நாங்கள் பார்க்க முடிந்தது. அவர்களின் துக்கத்தை வார்த்தைகளினால் எங்களால் வர்ணிக்க முடியாத நிலைமை. அவர்கள் பேசுவதை கேட்டு என்னால் பேசக்கூட முடியவில்லை. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.

ஏழைக்குடும்பம்

7 வயது மகனை இழந்த தாய், மனைவியை இழந்த 60 வயது பெரியவர், அதேமாதிரி தனது அண்ணனை இழந்த பெண், தன் மகனை இழந்த தாய் இரண்டு பேரும் ஒரே வீட்டில்.. இப்படியாக பெருவாரியாக அவர்கள் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கதறி அழுவதை பார்த்தால் நம்மால் பதில் சொல்ல முடியல, ஆறுதல் சொல்ல முடியல. அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு, அவர்கள் பதட்டத்துடன் சொல்வதை கேட்க வேண்டிய நிலைமை.

ஆனாலும், பிரதமர் சொன்னதை அவர்களிடம் பகிர்ந்துவிட்டு அங்கிருந்து வெளியே வர வேண்டிய நிலைமை. ஒவ்வொரு வீட்டிலும் இந்த அனுபவம் தான். இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி நம்ம நாட்டில் எங்குமே நிகழக்கூடாது.ரொம்ப பரிதாபமான நிலைமை, அங்கு வாய் வார்த்தைக்கு இடம் இல்லை. அந்த மாதிரி ஒரு துக்கம்.

மருத்துவமனையில் மூச்சுவிடக்கூட முடியாமல் அவர்கள் (சிகிச்சை பெறுபவர்களை கூறுகிறார்) அந்த நிலைமையில் பேசுனது எல்லாவற்றையும் நான் பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் இன்று சந்தித்து சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மனதை உருக்குகிறது

இந்த விசிட், முற்றிலும் அடிபட்டவர்களையும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தை பார்ப்பதற்காக மட்டும்தான் வந்திருக்கிறோம். இதில் வேறு ஒரு விஷயமும் இல்லை. நம்ம நாட்டில், நம்ம நாட்டு மக்கள் ஆர்வத்தோடு ஒரு பொது இடத்துக்கு வரும் போது நடக்கக்கூடிய இதுபோன்ற சம்பவங்கள், அதனால் வரக்கூடிய நிகழ்வுகள், அதனால் குடும்பங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் இது எல்லாம்தான் மனதை உருக்குகிறது.

இதுதான் என்னால் இப்போது கொடுக்க முடிந்த ரிப்போர்ட். சிகிச்சையை சரியாகத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்களும் சொல்லி இருக்காங்க. சேர்ந்த போது இருந்த நிலையை விட இப்போது பரவாயில்லை என்று சிகிச்சை பெற்று வருபவர்களும் சொல்றாங்க.

நிவாரணம்

அதில் சில பேர் மேஸ்திரியாக (கட்டட வேலை பணியாளர்கள்) வேலை பார்ப்பவர்கள், அவர்களின் கைவிரல்கள் உடைந்துள்ளன. அவர்கள் தினமும் ஊதியம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் அட்மிட் ஆகி வைத்தியம் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்து இருந்தார்.

ஒவ்வொரு நோயாளியிடமும் நான் உங்கள் அக்கவுண்ட்டுக்கு பணம் வந்துவிட்டதா? இல்ல… இனிமேல் தான் கேட்க வேண்டுமா என்று கேட்டேன். அதுபற்றிய செய்தி ஏதேனும் தெரியுமா என்று கலெக்டரிடம் கேட்டேன். டிபிடி (Direct Benefit Transfer) பற்றி அப்போது அங்கே அவருக்கு செய்தி இல்லை என்றாலும் இப்போது சொல்றாங்க, இன்னிக்கு காலையில் தான் இ மெயில் மூலமாக ரெக்வஸ்ட் வந்திருக்கிறது என்று சொல்றாங்க. ஒவ்வொரு அக்கவுண்ட் விவரங்களை கேட்டுள்ளனர், அதை இன்று ராத்திரிக்குள் அனுப்பி விடுகிறேன் என்று கலெக்டர் கூறி உள்ளார்.

உடனடியாக அந்த பணம், பாதிக்கப்பட்டவர்களின் கணக்கிற்கு நேரிடையாக போகிறது என்பதை அடுத்த 2 நாட்களுக்குள் நான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறியதாவது;

கேள்வி: மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஏதேனும் அறிக்கை கேட்டுள்ளதா?

அமைச்சர் பதில்: உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் பற்றி ரிப்போர்ட் கேட்டிருக்கிறதா என்று தெரியாது. அதுபற்றி விசாரிக்க வேண்டும்.

கேள்வி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து உள்ளீர்கள், அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? பிரதானமாக அவர்கள் என்ன சொன்னார்கள்?

அமைச்சர் பதில்; வீட்டில் இருக்கக்கூடிய முக்கியமான நபரை இழந்துவிட்டோம், சில வீட்டில் அவர்கள் தான்(பலியானவர்களை குறிப்பிடுகிறார்) அந்த குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரம் என்றனர். சிலர் பேர் அவங்க குழந்தையை இழந்துட்டாங்க. அவர்களின் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்களை பற்றி எடுத்துச் சொன்னாங்க.

கேள்வி; சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்டு வரும் விசாரணை சரியான முறையில் போய் கொண்டு இருப்பது போல் தெரிகிறதா? வேறு ஏதேனும் குளறுபடிகள் நடக்கும் என்பதற்கான விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா? ஆணையம் விசாரித்து, அதன் மூலம் தரப்படும் அறிக்கை மூலம் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது? இதற்கிடையில் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று முதல்வர் ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீங்க?

அமைச்சர் பதில்; நான் வந்தது அதற்காக இல்லை. வந்தது இங்கு… என்ன நடந்திட்டு இருக்கு, மாநில அரசு இப்படி சொல்கிறதா… இல்லை ஆய்வுக்குழு அமைச்சிருக்காங்களா? அதை பற்றி இல்லை. பிரதமர் தான் வரமுடியாத நிலையில் நீங்கள் இருவரும் போய், மத்திய அரசின் சார்பில் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் போய் பார்த்து நிலையை அறிந்து கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள், அதற்கு வந்திருக்கிறோம்.

கேள்வி: சம்பவ இடத்திற்கு நேரில் போய் பார்த்து உள்ளீர்கள்? என்ன நடந்தது?


அமைச்சர் பதில்: சம்பவம் நிகழ்ந்தது பற்றி அவர்கள் சொன்னாங்க. கும்பல் அதிகமாகிடுச்சு, ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிஞ்சி நிறைய பேர் வந்துட்டாங்க, பில்டிங் மேலே ஏறுனவங்க எல்லாம் கீழே விழுந்தாங்க, அந்த தகர கூரை மேல் நின்றிருந்தவர்கள் எல்லாம் வழுக்கி விழுந்தாங்க, அதற்குப்புறம் கம்பத்தின் மேல் விழுந்தாங்க, எலக்ட்ரிசிட்டி போயிடுச்சு அப்படின்னு அன்றைக்கு நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார்கள். நான் காதால் கேட்டுக்கிட்டேன்.

கேள்வி; யாருடைய கவனக்குறைவு இது?

அமைச்சர் பதில்; அதை நான் நிர்ணயிப்பதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.

கேள்வி; சிபிஐ விசாரணை வேண்டும் என்று அண்ணாமலை குறிப்பிடுகிறார். ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரித்து இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது கிடையாது என்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மேற்கோள் காட்டி கேட்கிறார்? இதில் சிபிஐ விசாரணை தேவையா?

அமைச்சர் பதில்; நான் மத்திய அரசு, பிரதமரின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். டாக்டர் முருகனும் என்னோடு மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருக்கிறார். இந்த விஷயத்தில் ஒரு கட்சியோட தலைவரோ இல்லை இன்னொரு கட்சியினுடைய தலைவரோ, இல்லை எங்க கட்சி தலைவரோ ஏதாவது பேசியிருந்தாலோ அதை பற்றி பேச நான் இங்கு வரல. அதனால் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது.

கேள்வி; பார்த்ததை அறிக்கையாக மத்திய அரசு கொடுக்க வாய்ப்பிருக்கிறதா?

அமைச்சர் பதில்; பிரதமர் என்னை போய் தனிப்பட்ட முறையில் பார்த்து பேசுங்கன்னு சொன்ன பிறகு, அங்கு பேசுனது நான் நிச்சயமாக ரிப்போர்ட் தான் செய்வேன்.

கேள்வி; இதற்கு முன்பாக எந்த ஒரு அரசியல் கூட்டங்களில் 40 பேர் இப்படி இறந்தது கிடையாது. மத்திய அரசு தலையிட்டு சில ஒழுங்குமுறைகளை செயல்படுத்தணும் அப்படிங்கிற விஷயமாக இருக்கும்போது, மத்திய அரசு சார்பில் ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுமா?

அமைச்சர் பதில்; நாட்டில் இதுபோன்ற இனி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்று நான் தான் முதலிலே சொன்னேன். இந்த கேள்விக்கு அதுதான் பதில். நான் இங்கு வந்தது, பார்த்தது அதை கச்சிதமாக அங்கு (பிரதமர், உள்துறை அமைச்சரிடம்) சொல்லத்தான் போறோம். ரிப்போர்ட் பண்ணத்தான் போறோம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Advertisement