அடுத்த இடியை இறக்கிய டிரம்ப்: வெளிநாட்டு சினிமாக்களுக்கு 100% வரி

18

நியுயார்க்: அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரியை விதிக்க போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரானது முதல் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டிரம்ப். உலகின் பல்வேறு போர்களை நான் தான் நிறுத்தினேன், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள் என்றார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார்.

தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளுக்கு மத்தியில் தற்போது புதியதாக அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் (அந்நிய நாடுகளின் திரைப்படங்கள்) சினிமாக்களுக்கு 100 சதவீதம் வரியை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தமது ட்ரூத் சோஷியல் வலைபதிவில் வெளியிட்டு உள்ளார்.

அதில் டிரம்ப் கூறி இருப்பதாவது;

ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாயை திருடுவது போல், மற்ற நாடுகளால் அமெரிக்காவின் திரைப்பட தயாரிப்புத் தொழில் திருடப்பட்டு வருகிறது. திறமையற்ற கவர்னரால் கலிபோர்னியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருபோதும் முடிவடையாத இந்த பிரச்னையை தீர்க்க, அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்போகிறேன்.

இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement