உலக விளையாட்டு செய்திகள்

ஸ்வியாடெக் '400'
பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0 என முன்னிலையில் இருந்த போது கொலம்பிய வீராங்கனை கமிலா ஒசோரியோ காயத்தால் பாதியில் விலகினார். ஸ்வியாடெ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் பெற்ற 400வது வெற்றி.


ஆஸ்திரேலியா அசத்தல்
செரம்பன்: மலேசியாவில் நடந்த பெண்களுக்கான (16 வயது) ஆசிய கோப்பை கூடைப்பந்து ('டிவிசன்-ஏ') பைனலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 86-50 என வெற்றி பெற்று கோப்பை வென்றது. ஜப்பான் அணி 71-58 என, சீனாவை வீழ்த்தி 3வது இடம் பிடித்தது.


அர்ஜென்டினா அபாரம்
வால்பரைசோ: சிலியில் நடக்கும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கியூபாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணி 0-1 என, இத்தாலியிடம் தோல்வியடைந்தது.


ஜப்பான் 'சாம்பியன்'
பிங்டான்: சீனாவில் நடந்த ஆசிய பேஸ்பால் சாம்பியன்ஷிப் பைனலில் சீனதைபே, ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 21வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் கொரிய அணி 4-3 என, சீனாவை வீழ்த்தி 3வது இடம் பிடித்தது.


எக்ஸ்டிராஸ்

* இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப், முதுகுப்பகுதி காயத்தால் விலகினார். இவருக்கு பதிலாக ஜெடியா பிளேட்ஸ் தேர்வானார்.


* ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கும் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் பவித்ரா, நந்தினி, அக்சயா, ஏஞ்சல் சில்வியா அடங்கிய தமிழக பெண்கள் அணி (45.76 வினாடி) வெண்கலம் வென்றது.


* கான்பெராவில் நடந்த ஜூனியர் பெண்கள் ஹாக்கி 3வது போட்டியில் இந்திய அணி 1-0 என ஆஸ்திரேலியாவை (21 வயது) வீழ்த்தி, முதல் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு சிவாச் (32வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.


* ஜப்பான் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் டகேரு யூஜுகி ஜோடி 4-6, 6-3, 18-16 என அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன், இவான் கிங் ஜோடியை வீழ்த்தியது.


* கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அபய் சிங் 2-3 (13-11, 5-11, 11-5, 3-11, 3-11) என எகிப்தின் பேர்ஸ் டெசவுகியிடம் போராடி தோல்வியடைந்தார்.


* 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 'பிளே-ஆப்' போட்டியில் (நவ. 14-16, பெங்களூரு) பங்கேற்கும் இந்திய அணிக்கு சஹாஜா, ஸ்ரீவள்ளி, அங்கிதா ரெய்னா, ரியா பாட்யா, பிரார்த்தனா தேர்வாகினர். மாற்று வீராங்கனையாக வைதேகி சவுத்ரி இடம் பிடித்தார்.

Advertisement