பஸ் முனைய இருப்பறையில் தீ கிளாம்பாக்கத்தில் பரபரப்பு

கிளாம்பாக்கம்;கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், உயர்மட்ட நடைபாதை அமைப்பதற்கான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில், நேற்று காலை திடீரென தீப்பற்றியதால், பரபரப்பு நிலவியது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும்படி, 280 மீ., துாரத்திற்கு, உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நுழைவாயில் அருகே, இரும்பு கன்டெய்னர் பெட்டியில், பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

தவிர, அலுவலக பயன்பாட்டிற்கான கணினிகளும் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில், கன்டெய்னர் பெட்டியிலிருந்து கரும்புகை வெளிவந்து, சிறிது நேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

அருகில் பணியிலிருந்த ஊழியர்கள், இதுகுறித்து மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

சம்பவம் குறித்து, கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக கன்டெய்னர் பெட்டியில் தீப்பிடித்தது தெரிந்துள்ளது.

இந்த விபத்தில், கன்டெய்னர் பெட்டி அறையில் இருந்த மூன்று கணினிகள் எரிந்து நாசமாகின.

Advertisement