தெருநாய்களுக்கு கருத்தடை மறைமலை நகரில் பணி தீவிரம்

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மறைமலை நகர் சிறப்பு நிலை நகராட்சி, 16 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, 21 வார்டுகளை கொண்டு உள்ளது.

இங்குள்ள தெருக்களில், நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால், இரவு பணி முடித்து செல்வோர், நாய்களுக்கு பயந்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

ஒவ்வொரு தெருக்களிலும் 15 முதல் 20 நாய்கள் உள்ளதால், குழந்தைகள் தெருவில் விளையாட முடியாத சூழல் உள்ளது.

தெருநாய்கள் தொல்லை குறித்து, மறைமலை நகர் நகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் தொடர் புகார்கள் அளித்து வந்தனர்.

இதையடுத்து, 20 லட்சம் ரூபாய் செலவில் நகராட்சி சார்பில், காந்திநகர் பகுதியில் அதிநவீன நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் கட்டப்பட்டு, கடந்த மே மாதம் திறக்கப்பட்டது.

கடந்த ஐந்து மாதங்களில், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த 317 ஆண் நாய்களுக்கும், 184 பெண் நாய்களுக்கும் என மொத்தம், 501 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் மூலமாக தற்போது நாய்கள் பிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ஐந்து நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றன.

பின் மீண்டும், பிடிக்கப்பட்ட பகுதிகளில் விடப்பட்டு வருகின்றன.

Advertisement