மண் லாரிகளால் மருதேரி சாலை சேதம் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை

திருப்போரூர்:மருதேரி கிராம சாலை, மண் லாரிகளால் கடுமையாக சேதமடைந்ததால், சாலையை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் ஊராட்சி, மருதேரி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த தெரு வழியாக அப்பகுதி மக்கள், கொண்டங்கி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மருதேரி ஏரியில் இருந்து மண் அள்ளப்பட்டது. ஏரியில் இருந்து, நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் மண் அள்ளப்பட்டு, மேற்கண்ட தெரு வழியாக லாரிகள் சென்றன.

இச்சாலையில், டிப்பர் லாரிகள் 60 டன் அளவில் அதிக சுமை ஏற்றிச் சென்றதால், மேற்கண்ட சாலை கடும் சேதமடைந்தது. சாலை முழுதும் மண் படர்ந்து, தார்ச்சாலை மண்சாலையாக மாறியது.

குறிப்பாக, அங்கு புதிய தார்ச்சாலை அமைத்து இரண்டே மாதங்களே ஆன நிலையில், மண் லாரிகள் சென்றதால் சாலை சேதமானது.

இதனால், புதிய சாலை அமைத்தும் பயனில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

எனவே, மேற்கண்ட சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருதேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement