வீடு கட்டி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது

சேலம், சேலம் அழகாபுரம் தோப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் டீ பால், 58. இவருக்கு சொந்த நிலம் பெரமனுார் சாலையில் உள்ளது. அந்த நிலத்தில், புதிதாக வீடு கட்ட ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், இவரது உறவினர் காரைக்கால் மாவட்டம், சர்ச் ரோடு பகுதியை சேர்ந்த எடிசன் ரெனால்டு ஜவகர், 39, என்பவர் வீட்டை நல்ல முறையில், குறைந்த விலையில் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒரு கோடியே 23 லட்சத்து, 53 ஆயிரத்து, 400 ரூபாய்கு ஒப்பந்தம் போட்டு தந்தார்.


இதையடுத்து ஒப்பந்தம் செய்தது போல காசேலையாகவும், நேரடியாகவும் பணம் பெற்றுக் கொண்டு, வீடு கட்டும் பணியை தொடங்கி பாதியில் நிறுத்தி விட்டார். இது குறித்து ரெனால்டு ஜவகரிடம் கேட்டதற்கு, மீதி தொகை கொடுத்தால் தான் தொடர்ந்து கட்ட முடியும் என கூறி காலம் தாழ்த்தி வந்தார், தொடர்ந்து ஏமாற்றும் நோக்கத்துடன் சரிவர பதில் அளிக்காமல் இருந்து வந்தார்.
இது குறித்து நேரில் சென்று கேட்டதற்கு கட்டடம் கட்ட முடியாது; இன்னும் அதிக பணம் தேவைப்படுகிறது என கேட்டு மிரட்டி தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனால் வேதனையடைந்த வின்சென்ட் டீ பால், பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், நேற்று எடிசன் ரெனால்ட் ஜவகரை கைது செய்தனர்.

Advertisement