கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை ஒப்படைத்த மக்கள்


தலைவாசல், நாவலுார் ஏரியில் இருந்து, கிராவல் மண் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை பிடித்த பொதுமக்கள், வீரகனுார் போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நாவலுார் ஏரியில் இருந்து, வேப்பம்பூண்டி நடுமேடு வழியாக, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல், கிராவல் மண்ணை டிப்பர் லாரி, டிராக்டர்களில் அனுமதியின்றி கடத்திச் சென்றனர். நள்ளிரவு, 12:30 மணியளவில், கிராவல் மண்ணுடன் வந்த டிப்பர் லாரியை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர், கீழே இறங்கி ஓடினார். பொதுமக்கள், வீரகனுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசாரிடம், கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை ஒப்படைத்தனர். அனுமதியின்றி மண் கடத்தும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், போலீசாரிடம் தெரிவித்தனர். மண் கடத்திய நபர்கள் குறித்து, வீரகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement