கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவன் கொலை திட்டம் தீட்டிய மனைவி உள்பட 3 பேர் கைது

ஏற்காடு, ஏற்காட்டில், கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவனை கொலை செய்த மனைவி உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே, கீரைகாடு புத்துார் மோட்டுகாடு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்,36; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி மாராயி. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். சிவக்குமார் நேற்று முன்தினம் தன் அப்பாச்சி பைக்கில், குப்பனுாரில் உள்ள சந்தையில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேரவில்லை.

இரவு, 7:30 மணியளவில் வாழவந்தி ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே, மலைப்பாதை ஓரத்தில் சிவக்குமார் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அங்கு வந்த உறவினர்கள், சிவகுமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு போலீசார், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரிக்க தொடங்கினர். சிவக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் உடைந்து கிடந்த ஹெல்மெட் ஒன்றையும், சாலையோரத்தில் உள்ள 5 அடி பள்ளத்தில் கிடந்த இரும்பு பைப் ஒன்றையும் கைப்பற்றிய போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதில், சிவக்குமார் மனைவி மாராயி, ஏற்காடு மருதயங்காடு கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், 21, என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது சிவக்குமாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி பிரச்னை வந்துள்ளது. சில நாட்கள் அமைதியாக இருந்த மாராயி, ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் பழக்கத்தை தொடர்ந்தார். சில நாட்களுக்கு முன், மாராயி வீட்டிற்கு சந்தோஷ் வந்துள்ளார். அதையறிந்த சிவக்குமார் அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். பின்னர் ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சிவக்குமார், மாராயி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையில், கள்ளத்
தொடர்புக்கு சிவக்குமார் இடையூறாக இருப்பதால், அவரை கொலை செய்ய மாராயி, சந்தோஷ் திட்டம் தீட்டியுள்ளனர். நேற்று முன்தினம் குப்பனுார் சந்தைக்கு சென்று வீடு திரும்பிய சிவக்குமாரை, சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் கீரைக்காடு புத்துார் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, 21, வாழவந்தி கிராமத்தை சேர்ந்த தினேஷ் ஆகியோர் பின் தொடர்ந்து வந்து, ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மலைப்பாதையில் வழிமறித்து இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து சந்தோஷ், அண்ணாமலை, சிவக்குமார் மனைவி மாராயி ஆகியோரை ஏற்காடு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தினேஷை தேடி வருகின்றனர்.

Advertisement