ஒரே ஒரு டாக்டருடன் புற நோயாளிகள் பிரிவு

காரைக்குடி : காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பெயரளவிற்கு செயல்படுவதால் நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றனர். 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடந்தது.
இந்நிலையில் சூரக்குடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது. சூடாமணிபுரம் சுப்பிரமணியபுரம், கணேசபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி காளவாய் பொட்டல் மக்கள் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து முறையாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றம் செய்யப்படவில்லை. பழைய மருத்துவ மனை கட்டடங்கள் பயனின்றி பாழாகி கிடப்பதோடு, ஒரு மருத்துவருடன் புறநோயாளிகள் பிரிவு மட்டும் செயல்பட்டு வருகிறது.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா கூறுகையில்: அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்வதை கண்டித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. புதிய மருத்துவமனைக்குச் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. ஆட்டோவில் செல்ல ரூ.300 வரை செலவாகும். எனவே பழைய மருத்துவமனையை நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்: நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வருகிறது. சுகாதாரத் துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!