பழநியில் வன்னிகாசூரன் வதம் நவராத்திரி விழா நிறைவு

பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் நேற்று (அக்.1) கோதைமங்கலத்தில் வன்னிகாசூரன் வதத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் செப்.22.,ல் நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று (அக்.,1.) வரை விழா நடை பெற்றது.

நேற்று பழநி முருகன் கோயிலுக்கு வின்ச்,ரோப் படிப்பாதைகளில் பக்தர்கள் பகல் 11:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் அடிவாரத்தில் பக்தர்கள் நிறுத்தப்பட்டனர்.

கோயிலில் தரிசன டிக்கெட் வழங்குவது பகல் 11:30 மணிக்கு நிறுத்தப்பட்டது. பழநி கோயில் மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. மதியம் 3:00 மணிக்கு முருகன் கோயில் நடை அடைக்கப்பட்டு

பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது. புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பல்லக்கின் மூலம் வந்தார்.

தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதைமங்கலத்தில் கோதீஸ்வரர் கோயில் முன்பு வன்னி மரத்தில், வன்னிகாசூரன் வதத்தில் அம்பு போடுதல் நிகழ்வு சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் மூலம் நடைபெற்றது. அதன் பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்து, வேல், முருகன் கோயில் சென்று அடைந்ததும் அர்த்த சாம பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள் அழகர்சாமி, சரவணன், டி.எஸ்.பி., தனஜெயன், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், தங்க முனியசாமி, தென்னரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று (அக்.2)வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Advertisement