கருவை கலைக்க சொன்ன காதலனின் கழுத்தை அறுத்து கொன்ற காதலி

ராய்ப்பூர், அக். 1-

சத்தீஸ்கரில், ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு, பின் கருவை கலைக்கும்படி சொன்ன காதலனின் கழுத்தை அறுத்து 16 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரைச் சேர்ந்தவர் முகமது சதாம். இவர், சத்தீஸ்கரின் அபன்பூர் பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அச்சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில், ராய்ப்பூரில் உள்ள லாட்ஜில் இருவரும் கடந்த மாதம் 28ம் தேதி தங்கினர். அப்போது, முகமது சதாம், தனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லாததால், கருவை கலைத்துவிட சிறுமியிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கத்தியை காட்டி சிறுமியை அவர் மிரட்டினார். அதன்பின் சமரசம் ஏற்பட்டு இருவரும் உறங்கச் சென்றனர்.

எனினும், ஆத்திரத்தில் இருந்த அச்சிறுமி, சதாம் மிரட்டிய அதே கத்தியை எடுத்து, அவரது கழுத்தை அறுத்து கொன்றார். அத்துடன், அவரது மொபைல் போனையும் எடுத்துக்கொண்டு அச்சிறுமி வெளியேறி தன் வீட்டிற்கு சென்றார்.

அங்கு, நடந்தவற்றை தன் தாயிடம் கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், உடனே தன் மகளுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு, தன் காதலனை கொலை செய்ததை போலீசாரிடம் அச்சிறுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அச்சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement