ஆப்கன் முழுதும் இணையசேவை துண்டிப்பு; அரசு மற்றும் வங்கிசேவைகள் முடக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தான் முழுதும் இணையசேவை துண்டிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக தலிபான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியமைத்தனர். அதன்பிறகு, பல்வேறு திட்டங்களையும், தடைகளையும் தலிபான் அரசு அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூல், பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர், தகார் உள்பட பல்வேறு மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள், வங்கி, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளின் சேவைகள் அடியோடு முடங்கியுள்ளன. குறிப்பாக, தொலைபேசி சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஒழுக்கக் கேட்டை சீர் செய்யும் விதமாக, பைபர் ஆப்டிக் இணையசேவையை தலிபான் அரசு தடை செய்ததாக தகவல் வெளியாகியது.
ஆனால், தலிபான் அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பழைய பைபர் ஆப்டிக் கேபிள்கள் சேதமடைந்ததால், அதனை மாற்றும் பணிகளே நடந்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இந்த இணையசேவை துண்டிப்பு காரணமாக மனிதாபிமான அமைப்புகளின் செயல்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. எனவே, உடனடியாக இணையசேவையை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.