குட்டை திடலை பாதுகாக்கணும்! நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்

உடுமலை; குட்டைத்திடல், குப்பைக்கிடங்காக மாறி வருவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

உடுமலை தளி ரோட்டில், போலீஸ் ஸ்டேஷன் எதிரில், குட்டைத்திடல் உள்ளது. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குட்டை மைதானத்தின் ஒரு பகுதியில், போலீசார், குற்றவழக்குகளில், பறிமுதல் செய்த வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

காந்தி சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அருகிலுள்ள குடியிருப்பை சேர்ந்தவர்கள் முன்பு விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இப்பகுதியில், கட்டட கழிவுகளை கொட்டுவது அதிகரித்துள்ளது.

குப்பைத்தொட்டி இல்லாததால், கழிவுகள் அங்கு வீசப்படுகிறது. அப்பகுதி படிப்படியாக குப்பை கிடங்காக மாறி வருகிறது.

இதனால், அருகிலுள்ள நுாலகத்துக்கு படிக்க வரும் வாசகர்களும், அவதிக்குள்ளாகின்றனர். மைதானத்தின் ஒரு பகுதி பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. அங்கும் போதிய பராமரிப்பு செய்யப்படுவதில்லை.

குட்டை திடல் மைதானம் முழுவதுமாக குப்பை கிடங்காக மாறும் முன், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குட்டையை பாதுகாக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement