பிரதான ரோடுகள் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா; நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
உடுமலை; உடுமலையில், பிரதான ரோடுகள் சந்திக்கும் முக்கோணம் பகுதியில், ரோட்டை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா, சிக்னல் அமைக்க வேண்டும்.
கோவை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆனைமலை செல்லும் ரோடு இணைகிறது.
மாவட்ட முக்கிய சாலையான, தளி, வாளவாடி ரோடு மற்றும் தேவனுார் புதுார் - ஆனைமலை செல்லும் மாநில நெடுஞ்சாலையும், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையும் இணையும் பகுதியாக உள்ளதால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியிலிருந்து அதிவேகமாக வரும் வாகனங்களும், ஆனைமலை ரோட்டில் வரும் வாகனங்களும், ரோடுகளில் இணையும் போது சிக்கல் ஏற்படுகிறது.
அதே போல், குறுகலான வளைவு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாதது, ரோட்டின் இருபுறங்களிலும் பஸ்கள் மற்றும் ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள ரோடு சந்திப்பு பகுதியில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், இப்பகுதியில் நிரந்தரமாக வாகன நெரிசலும், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், முக்கோணம் பகுதியில், ரோட்டை விரிவாக்கம் செய்து, சிக்னல் மற்றும் ரவுண்டானா அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, வாகன போக்குவரத்து குறித்தும், ரவுண்டானா அமைப்பது குறித்து அதிகாரிகள் குழு திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பியது.
ஆனால், பல ஆண்டுகளாகியும், முக்கோணம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு தீர்வு காணும் வகையில் ரவுண்டானா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல், இழுபறியாகி வருகிறது.
எனவே, ரோடு சந்திப்பு பகுதியில், ரோடு விரிவாக்கம், ரவுண்டானா மற்றும் சிக்னல் அமைக்கவும், போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.