அரசு செயலாளர்களை வைத்து அரசியல்: இபிஎஸ் குற்றச்சாட்டு

தர்மபுரி: '' ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்பு கொடுக்கும் முதல்வர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும். ஒரு நபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். '' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் தர்மபுரியில் இபிஎஸ் பேசியதாவது: நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமை. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால் கரூரில் 41 உயிரை இழந்திருக்க வேண்டியதில்லை.
நான் 163 தொகுதியில் மக்களை சந்தித்தேன், 5 முதல் 6 மாவட்டத்தில் தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய கட்சித் தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர். ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால் ஆளே இல்லாத பகுதியில்கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்புக் கொடுக்கும் முதல்வர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்.
கரூரில் நடந்த சம்பவத்தை எப்படி அரசு செயலாளர் சொல்ல முடியும்? ஒருநபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். உங்கள் துறையின் பணிகளை மட்டும் நீங்கள் செய்ய வேண்டும். இதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டியெடுத்து தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன். மக்கள் துயரத்தை எண்ணி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய துயர சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் சரி? அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும், இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சியிலும், அதிகாரிகளிடமும் அது கிடைக்காது.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார், நீங்க என்ன அரசியல்வாதியா? சட்டத்தைப் பாதுகாப்பது தான் உங்கள் பொறுப்பு. சரியான பாதுகாப்பு கொடுக்காததால் இத்தனை பேரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். கரூரில் ஒரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கிறது, அப்படியிருக்கும்போது ஏடிஜிபி செய்தியாளர்களிடம் நியாயப்படுத்தி பேசினால், கீழே இருக்கும் அதிகாரி எப்படி நியாயமாக விசாரிப்பார்..? இவை எல்லாமே நடந்த தவறை மறைப்பதற்கு அரசு நடத்தும் கண் துடைப்பு நாடகம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
மவுன அஞ்சலி
இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னர், கரூரில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து இபிஎஸ் மற்றும் அதிமுகவினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பயணம் தேவையா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் - பகுதியில் இபிஎஸ் பேசியதாவது: துணை முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போனார். செப்டம்பர் 27 துயர சம்பவத்தில் 41 பேர் இறந்ததாக தகவல் தெரிவித்தனர், உடனே தனி விமானத்தில் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா போய்விட்டார். என்னங்க அநியாயம் இது? 41 பேர் இறந்துள்ளனர். இப்போது மக்கள் துயரத்தில் பங்கெடுப்பவரே உண்மையான துணை முதல்வர். இப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும்.
யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றுதான் அவர் நினைக்கிறார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் இங்கிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் அளவுக்கு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அழகு. அதெல்லாம் கருணாநிதி குடும்பத்தினருக்கு வராது. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி அரசு என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.
தேர்தல் நேரத்தில் கருத்துகளைச் சொல்லி மோதிக்கொள்ளலாம். ஆனால், ஆட்சி அமைந்தபிறகு மக்களை காக்க வேண்டும். அப்படி அதிமுக ஆட்சியில் பார்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் மாற்றாந்தாய் மக்கள் போல பார்ப்பது சரியல்ல. இனியாவது அரசு என்றில்லாமல் நடுநிலையோடு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.
நாட்டில் பணம், நகை திருடுவார்கள். ஆனால், திமுக ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட கேவலமான நிலை கிடையாது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் வறுமையில் வாடும் ஏழைகளை தேடிப்பிடித்து அவர்களுடைய கிட்னியை முறைகேடாக எடுத்து பல லட்சத்துக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. திமுக அரசாங்கமே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்பதை கண்டறிந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மட்டும் ரத்து செய்தனர். இதில், யாரையும் கைது செய்யவில்லை. கொடுமையிலும் கொடுமை வறுமை. அந்த வறுமையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு ஆசை காட்டி கிட்னிக்குப் பதிலாக கல்லீரல் எடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட கொடுமையான அரசு திமுக அரசு. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.





மேலும்
-
ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி
-
ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
-
இன்று 14 மாவட்டங்கள், அக்., 5ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி