ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் எப் 16, ஜேஎப் 17 ரக விமானங்கள் உள்பட 10 விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
அக்., 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது; ஆப்பரேஷன் சிந்தூர் இந்தாண்டின் சிறந்த கூட்டு ராணுவ நடவடிக்கையாகும். இந்த தாக்குதல் இந்திய விமானப்படையின் வலிமையை வெளிக்காட்டியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 300 கிமீ நுழைந்து சென்று இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்.
உயர்தர தொழில்நுட்பம் கொண்ட எஸ் 400 ஏவுகணை அமைப்பு தான் முக்கிய பங்கு வகித்தன. இது ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. நாங்கள் இலக்குகளை துல்லியமாக தாக்கினோம். நம் படையினருக்கு குறைந்த பாதிப்புகளே ஏற்பட்டன. ஒரே இரவில் அவர்களை (பாகிஸ்தான்) முழங்காலிடச் செய்தோம். இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படையின் கூட்டு நடவடிக்கையே இந்த வெற்றிக் காரணம்.
ஆனால், ஆப்பரேஷன் சிந்தூரின் போது தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால், அதற்கு மீடியாக்கள் சரியான பதிலை கொடுத்தனர். ஏனெனில், நம் வீரர்கள் சண்டையிடும்போது பொதுமக்களின் மன உறுதி பாதிக்கப்படக்கூடாது.
ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலின்போது, இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் விமானப்படையின் எப் 16, ஜேஎப் 17 ரக விமானங்கள், ஒரு கண்காணிப்பு விமானம் ஆகியவை, வான்வெளியில் பறந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவை மட்டுமின்றி, பாகிஸ்தான் ரேடார் நிலைகள், கட்டளை மையங்கள், ஓடுபாதைகள், விமான ஹேங்கர்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலின்போது, 4 முதல் 5 விமானங்கள் அழிக்கப்பட்டன. மொத்தம் பாகிஸ்தானுக்குச் சொந்தமான 10 விமானங்கள் வீழ்த்தப்பட்டன, எனக் கூறினார்.






மேலும்
-
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
-
தீபாவளி சீசனில் தேங்காய் விலை உயர வாய்ப்பு தென்னை விவசாயிகள் நம்பிக்கை
-
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2ம் இடம் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்
-
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
-
25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து தப்பிய 3 முதியவர்கள்
-
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை