அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்

1


புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் அக்.,8ல் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இது பிரதமர் ஸ்டார்மரின் முதல் இந்திய பயணமாகும்.


இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் அக்டோபர் 8, 9ம் தேதிகளில் இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வார்.


இரண்டு நாள் பயணத்தின் போது, ​​வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.


அக்டோபர் 9ம் தேதி மும்பையில், மோடியும், ஸ்டார்மரும் தொழில்துறைத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம். பிரதமர் மோடியும், ஸ்டார்மரும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர்.


இரு பிரதமர்களும் மும்பையில் நடைபெறும் 6வது உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவில் கலந்து கொண்டு, முக்கிய உரைகளை நிகழ்த்தி இருக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலையில் பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணத்தை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் கேர் ஸ்டார்மர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரிட்டன் பயணத்தின் போது இந்தியாவிற்கு வருமாறு கேர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement