'லிப்ட்' கதவு இடையே கால் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு
புனே: மஹாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பில், 12 வயது சிறுவன் கால், 'லிப்ட்' கதவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
மஹாராஷ்டிராவின் புனே அருகேயுள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள சோவிஸ்வாடி ஹவுசிங் சொசைட்டியைச் சேர்ந்த சிறுவன் அமேயா, 12. இவன், நேற்று முன்தினம் மாலை, தங்கள் வீடு உள்ள நான்கு மாடி குடியிருப்புக்கான லிப்டில், மூன்றாவது மாடியில் இருந்து மேல் நோக்கி சென்றுள்ளான்.
'கிரில் கேட்' கொண்ட அந்த லிப்ட் கதவின் இடையே திடீரென அவனது கால் சறுக்கியது. மூன்றாவது மற்றும் நான்காவது மாடிக்கு இடையே கால் சிக்கியதால் சிறுவன் அலறி துடித்தான். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து, லிப்ட் கட்டுப்பாட்டு அறை கதவை திறந்து மின்சாரத்தை துண்டித்தனர். பின், லிப்ட்டை கையால் மூன்றாவது தளத்துக்கு இறக்கி, கதவை கட்டரால் வெட்டி சிறுவனை மீட்டனர். பின், அவனை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் அமேயா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.