புராவிடன்ட் கிரீன் பார்க் அபார்ட்மென்ட் அணி சாம்பியன்! 'தினமலர் பிரீமியர் லீக்' அபார்ட்மென்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டம்

கோவை: 'தினமலர்' நாளிதழ் சார்பில் நேற்று நடந்த, 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2025' இறுதி போட்டியில், புராவிடன்ட் கிரீன் பார்க் அபார்ட்மென்ட் அணி (பி.ஜி.பி., 11) டிராபியை வென்றது.
'தினமலர்' நாளிதழுடன், 'பெடரேஷன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேசன்ஸ்' இணைந்து, 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2025' போட்டி நடத்தியது.
'தினமலர்' பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டென்னிஸ் பந்து கொண்டு, 10 ஓவர் 'நாக் அவுட்' முறையிலான போட்டி நடத்தப்பட்டது.
எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம், 'வால்ரஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' ஆகியன, கோ-ஸ்பான்சர்களாக கரம் கோர்த்தன.
24 அணிகள் பங்கேற்றன. சி.ஐ.டி., சங்கரா, என்.ஜி.பி., இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானங்களில் போட்டிகள் நடந்தன.
செப். 28ல் போட்டி துவங்கியது. அக். 2ல் காலிறுதி போட்டிகள் நடந்தன. சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று, அரையிறுதி போட்டிகளும், இறுதி போட்டியும் நடந்தன.
முதல் அரையிறுதியில், ஹோப்ஸ்-11 அணியும், செந்தில் கோல்டன் கேட் அணியும் மோதின. ஹோப்ஸ்-11 அணியினர், 10 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 115 ரன் எடுத்தனர்.
செந்தில் கோல்டன் கேட் அணியினர், 8 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 78 ரன் மட்டுமே எடுத்தனர். 70 ரன் விளாசிய ஹோப்ஸ்-11 அணி வீரர் மபாசாவுக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இரண்டாம் அரையிறுதியில், பி.ஜி.பி., 11 அணியும், ராஜ்குரு ஸ்டார் அணியும் மோதின. பி.ஜி.பி., அணியினர், 10 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 71 ரன் எடுத்தனர்.
ராஜ்குரு அணியினர், 10 ஓவரில் மூன்று விக்கெட்டுக்கு, 68 ரன் எடுத்தனர்; 3 ரன் வித்தியாசத்தில் பி.ஜி.பி., அணி வெற்றி பெற்றது.
இரண்டு ஓவர்களில், ஒரு ரன் வழங்கி, மூன்று விக்கெட் வீழ்த்திய பி.ஜி.பி., வீரர் விமலுக்கு, ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், ராஜ்குரு ஸ்டார் அணியும், செந்தில் கோல்டன் கேட் அணியும் விளையாடின. ராஜ்குரு அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 72 ரன் எடுத்தனர்.
செந்தில் கோல்டன் கேட் அணியினர், 10 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 63 ரன் எடுத்தனர். இரு ஓவரில், 9 ரன் வழங்கி, இரு விக்கெட் வீழ்த்திய, ராஜ்குரு அணி வீரர் விசாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
'டிராபி' யாருக்கு? பரபரப்பான இறுதிப்போட்டியில், பி.ஜி.பி., 11 அணியும், ஹோப்ஸ்-11 அணியும் மோதின. பி.ஜி.பி., அணியினர், 10 ஓவரில், 4 விக்கெட் இழப்புக்கு, 123 ரன் எடுத்தனர். 124 ரன் இலக்குடன் களம் இறங்கிய ஹோப்ஸ்-11 அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 85 ரன் எடுத்து இரண்டாமிடம் பிடித்தனர்.
முதலிடம் பிடித்த, புராவிடன்ட் கிரீன் பார்க் அபார்ட்மென்ட் (பி.ஜி.பி., 11) அணிக்கு, ரூ.25 ஆயிரம் மற்றும் டிராபியை, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் வழங்கினார்.
இரண்டாமிடம் பிடித்த ஹோப்ஸ்-11 அணிக்கு, (ஜெயின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா அபார்ட்மென்ட்) 'வால்ரஸ்' நிர்வாக இயக்குனர் டேவிட் ரூ.15 ஆயிரம் மற்றும் டிராபி வழங்கினார்.
மூன்றாமிடம் பிடித்த, ராஜ்குரு ஸ்டார் அணிக்கு 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' மேலாளர் ரியாஷ், ரூ.10 ஆயிரம் மற்றும் டிராபி வழங்கினார். நான்காமிடம் பிடித்த செந்தில் கோல்டன் கேட் அணிக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இறுதிப்போட்டியில், 52 ரன் எடுத்த பி.ஜி.பி., அணி வீரர் நவீனுக்கு, ஸ்போர்ட்ஸ் லேண்ட் மேலாளர் ரியாஷ் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
ராஜ்குரு அணி வீரர் யாஸ் ஜெயினுக்கு, 'வால்ரஸ்' நிர்வாக இயக்குனர் டேவிட் சிறந்த பேட்ஸ்மென் விருது, பி.ஜி.பி., அணி வீரர் பாரதிக்கு சிறந்த பவுலர் விருதை வழங்கினார்.
பி.ஜி.பி., அணி வீரர் மனோஜ்க்கு, 'பிளேயர் ஆப் தி டோர்னமென்ட்' விருதை எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் வழங்கினார்.