மாநில கபடி போட்டி சேலம் அணி அபாரம்

சென்னை,
சென்னையில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், சேலம் அணி அபார வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை போட்டி, தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நடந்து வருகிறது. சென்னையில், கால்பந்து, கபடி, டென்னிஸ் உட்பட, 15 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி, சென்னை, நேரு பூங்காவில் உள்ள விளையாட்டு திடலில் நடந்தது. முதல் போட்டியில், சேலம் அணி, புதுக்கோட்டை அணியை எதிர்த்து மோதியது. இதில், சேலம் அணி 46 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

அடுத்த போட்டியில், அரியலுார் அணி, செங்கல்பட்டு அணியை எதிர்கொண்டது. இதில், அரியலுார் அணி 40 - 36 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. நீலகிரி அணிக்கு எதிரான போட்டியில், கிருஷ்ணகிரி அணி 37 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

தொடர்ந்து நடந்த பள்ளி மாணவியருக்கான கபடி போட்டியில், தர்மபுரி மாவட்ட அணி, 44 - 30 புள்ளிக்கணக்கில், ராணிப்பேட்டை அணியை வீழ்த்தியது. ஈரோடு அணி, புதுக்கோட்டை அணியை 65 --13 என்ற புள்ளிக்கணக்கிலும், நாமக்கல் அணி, திண்டுக்கல் அணியை 55 - 19 என்ற புள்ளிக்கணக்கிலும் வென்றன.

Advertisement