ஆந்திர அமைச்சருக்கு பிரியங்க் கார்கே பதிலடி

பெங்களூரு: ''ஒவ்வொரு முறையும் இங்கே வா... இங்கே வா... என்று சொல்வது சரியல்ல. கர்நாடகாவையும், பெங்களூரையும் அவமதிப்பது சரியல்ல,'' என, ஆந்திர அமைச்சர் நாரா லோகேசுக்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகா முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பாக, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும், ஆந்திர அமைச்சர் நாரா லோகேசுக்கும் இடையே 'எக்ஸ்' தளத்தில் தொடர்ந்து மோதல் நடந்து வந்தது.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று அமைச்சர் பிரியங்க் கார்கே அளித்த பேட்டி:

கர்நாடகாவின் மூலதனத்தை ஈர்க்க, ஆந்திர அரசு முயற்சிக்கின்றது. ஆந்திராவிடம் எதுவும் இல்லை.

அம்மாநிலத்தின் தலைநகரான அமராவதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கி உள்ளார்.

முதலீட்டாளர்களை, தங்கள் மாநிலத்திற்கு இங்கே வா... இங்கே வா... என்று ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அழைக்கிறார். அவர்களுக்கு வரும் முதலீடுகளை, அவர்கள் வாங்கிக் கொள்ளட்டும். பெங்களூரு உட்பட கர்நாடகாவை அவமதிப்பது சரியல்ல.

மத்திய அரசுக்கு, கன்னடர்களின் உழைப்பு, வியர்வை, வரிகள் தேவைப்படுகிறது. ஆனால், கர்நாடகாவுக்கு உரிய நிதியை வழங்குவதில் மோடி ஏமாற்றுகிறார். நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து இரண்டு முறை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவுக்கு நன்றி கடனை செலுத்த வேண்டமா; எதற்காக இவ்வளவு பாகுபாடு?

அனைத்திற்கும் கருத்துத் தெரிவிக்கும் பிரஹலாத் ஜோஷி, கர்நாடகாவுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து கண்டனம் தெரிவிக்க வேண்டாமா? கர்நாடகா செலுத்தும் வரி பணத்தில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் பள்ளிகள், கல்லுாரிகள் கட்டுகின்றனர். அவர்கள் நடத்தும் லட்சதீப உத்சவத்துக்கு இங்குள்ள பணத்தை செலவழிப்பது சரியா?

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement