டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரிக்குள் நடத்தப்படும். சீரமைப்பு பணி நடக்கும் வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என பட்டர்கள் கூறும்பட்சத்தில் இந்தாண்டு டிசம்பரிலேயே கும்பாபிஷேகம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மதுரையில் நேற்று அறநிலையத்துறை அமைச்சர் கூறியதாவது: அதிகளவு குடமுழுக்கு நடத்திய ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது. நான்காண்டு காலத்தில் 3707 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் திருப்பணிகளில் 186 பணிகள் செய்வதற்கு ரூ.23.70 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 112 பணிகளுக்கு கோயில் நிதியில் இருந்து ரூ.8.90 கோடியும், 69 பணிகள் உபயதாரர் நிதி மூலம் ரூ.14.80 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் டிசம்பரில் முடியும்.

இங்குள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் 2018 பிப்ரவரியில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுப்பிப்பதற்கு தேவைப்படுகின்ற கற்களை எடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது உண்மை தான்.

ஒரே நீளமாக 15 அடிக்கு கல் தேவைப்படுகிற நிலையில் குவாரியில் கிடைப்பது கடினம்.

ரூ.35.50 கோடி மதிப்பீட்டில் செலவு மேற்கொள்ளப்படுகிறது. மொத்தமுள்ள 79 துாண்களில் 18 துாண்கள் பொருத்தப்பட்டுள்ளன. துாண்கள் வரப்பெற்று செதுக்கும் பணி நடக்கிறது. மீதி 11 துாண்கள் அக்.,15 க்குள் வந்து சேரும். இப்பணி டிசம்பரில் நிறைவுபெறும்.

பணிகள் நிறைவடைந்த பின் பிப்ரவரிக்குள் குடமுழுக்கு நடத்துவதா அல்லது வீரவசந்தராயர் மண்டபத்தை விடுத்து டிசம்பரில் குடமுழுக்கு நடத்துவதா என்பதை பட்டர்களுடன் ஆலோசித்த பின் முடிவெடுக்கப்படும்.

மீனாட்சி கோயிலுக்கு உட்பட்ட 18 உபகோயில்களில் 9 கோயில்களுக்கு குடமுழுக்கு முடிந்துவிட்டது. நவம்பருக்குள் இன்னும் 4 கோயில்கள் உட்பட அனைத்து உபகோயில்களுக்கும் பிப்.,க்குள் குடமுழுக்கு நடத்தப்படும்.

திருப்பரங்குன்றம் ரோப்கார் குறித்த சாத்தியக்கூறு அறிக்கை ஆராய்ந்து தரப்பட்டுள்ளது. திட்டத்திற்கான இறுதிவடிவம் கேட்டுள்ளோம். அது வந்தவுடன் டெண்டர் கோரப்படும் என்றார்.

Advertisement