ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை
மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில், இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் பங்களாகுட்டா வனப்பகுதியில் சோதனை நடத்தியபோது, ஏழு மண்டை ஓடுகள், நுாற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் சிக்கின. அவை தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தர்மஸ்தலாவில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என்று நம்பி, பலர் இங்கு வந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், அடையாளம் தெரியாத உடல்களை, தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்து சார்பில், அடக்கம் செய்யப்பட்டது பற்றியும், எஸ்.ஐ.டி.,க்கு தகவல் கிடைத்தது. சில உடல்களை, இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் டிரைவர்கள் ஜலீல் பாவா, ஹமீது ஆகியோர் எடுத்துச் சென்றதும் தெரிந்தது. இதனால் விசாரணைக்கு ஆஜராக, இருவருக்கும் எஸ்.ஐ.டி., சம்மன் அனுப்பியது.
பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகத்தில் நேற்று இருவரும் ஆஜராகினர். 'அடையாளம் தெரியாத எத்தனை உடல்களை, ஆம்புலன்சில் எடுத்துச் சென்றீர்கள்; உடல்கள் புதைக்கப்பட்டபோது, போலீசார் இருந்தனரா; முறைப்படி உடல்கள் புதைக்கப்பட்டதா; எத்தனை ஆண்டுகளாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்கிறீர்கள்?' என்பது உட்பட பல கேள்விகளை, விசாரணை அதிகாரிகள் ஜிதேந்திர குமார் தயமா, சைமன் எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர். 'தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம்' என்று கூறி, இருவரையும், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும்
-
18ம் கால்வாய் நீரை போடி வரை திறக்க கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
-
பஸ்கள் மோதியதில் கண்ணாடி சேதம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
-
அமைச்சர் ஆய்வு செய்யவிருந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கும் மிரட்டல்
-
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்