மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி

மதுரை : மதுரையில் அ.தி.மு.க., வட்டசெயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான சுசீந்திரனின் பழமையான 3 மாடி வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஜெமீலா 60, இறந்தார். இரு குழந்தைகள் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெமீலா. இரு பேரக்குழந்தைகளுடன் மதுரை வந்தார். கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அண்ணாநகர் யாகப்பா நகர் சக்திமாரியம்மன் கோயில் அருகே உள்ள சகோதரர் வீட்டிற்கு நேற்று மாலை ஆட்டோவில் வந்தார். அப்போது சகோதரர் வீட்டின் எதிரே பழமையான 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து ஆட்டோவில் இருந்து இறங்கிய ஜெமீலா மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் வந்த 2 குழந்தைகள் காயமுற்றனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிய ஜெமீலாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இடிந்த வீடு மேலமடை அ.தி.மு.க., வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான சுசீந்திரனுக்கு சொந்தமானது. பழமையான இந்த வீட்டில் பாதுகாப்பு கருதி யாரும் குடியிருக்கவில்லை. மதுரை வடக்கு தாசில்தார் பாண்டி, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர். ஊருக்கு புறப்படும் முன் சகோதரரிடம் சொல்லிவிட்டு செல்ல வந்த இடத்தில் மூதாட்டி இறந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கலெக்டர் பிரவீன்குமார் கூறுகையில், ''பழமையான கட்டடம் இடிந்தது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சித்ரா விசாரணை நடத்துவார். மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள பழமையான கட்டடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது'' என்றார்.

Advertisement