'சாதனைகளின்' ஏட்டு சுப்புலட்சுமி

தனது ஒரு மாத ஊதியத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளித்து உதவுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக இதனை செய்து வருகிறார்.
இவர் கூறியது: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொந்த ஊர். 2008ல் திருப்பூரில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்து, 2010ல் போலீஸ் பணிக்கு தேர்வாகி காஞ்சிபுரத்தில் பயிற்சி பெற்றேன். எனக்கு 2012 ல் போடியை சேர்ந்த முருகவேலுடன் திருமணம் நடந்தது. கணவர் தனியார் பள்ளி பஸ் டிரைவர். எங்களது அன்பில் அபிமன்யூ, ஸ்ரீவிஷ்ணு என 2 மகன்கள், மாமியார், மாமனார் என கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். அஞ்சல் வழி முதுகலை எம்.ஏ., தமிழ் இலக்கியம் படித்துள்ளேன்.
எழுத்தாளர் செந்தில்குமார் எழுதிய கழுதைப்பாதை, முறிமருந்து, காலகண்டம், மறுக்கை ஆகிய நாவல்களில் இருந்து சில தலைப்புகளில் ஆராய்ச்சிப்படிப்பை மேற்கொண்டுள்ளேன். கழுதைப்பாதை நாவலில் போடி மெட்டு உருவான வரலாறு.
அங்குள்ள முதுவாக்குடி மக்கள் 150 ஆண்டுகளுக்கு முன் போடி மெட்டு பாதையை உருவாக்கியது, அதிலுள்ள சிக்கல்கள் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.
தற்போது தனிக்குடும்ப உறவுகளில் ஏற்படும் சிதைவுகள் குறித்து 'குடும்ப உறவுகளின் சிக்கல்களும், சிதைவுகளும்' என்ற தலைப்பில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறேன். விரைவில் பிஎச்.டி., பட்டம் பெற்றுவிடுவேன்.
நேர மேலாண்மை
கடவுள் நம் அனைவருக்கும் 24 மணி நேரத்தை வழங்கி இருக்கிறார். இதில் யார் யார் எவ்வாறு நேர மேலாண்மையை கடைபிடிக்கிறோம் என்பதில்தான் வெற்றி உள்ளது. அதற்கு நானே சாட்சி. எனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர். தினமும் அதிகாலை 4:00 முதல் 6:00 மணி வரை சமையல் முடித்து விட்டு, 6:00 மணி முதல் 7:00 மணி வரை மைதானத்தில் உடற்பயிற்சி செய்வதை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடிக்கிறேன். இதனால் உடல் வலுவாகி தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
இதனால் குடும்பத்தில் கணவர், பிள்ளைகள், மாமியார், மாமனார் என அனைவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி கவனிக்க முடிகிறது. இதனால் என்மீது என் குடும்பத்தினருக்கு அன்பும், அக்கறையும் கூடியிருக்கிறது. அதன்பின் மேலதிகாரிகள் உத்தரவில் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு, நேர மேலாண்மை, கூட்டுக்குடும்ப நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
நான் பணிபுரிந்த பல்வேறு மாவட்டங்களில் நடந்த மாரத்தான் போட்டிகளில் 11 முறை வென்று சான்றிதழ் பெற்றுள்ளேன். கடந்த 3 மாதங்களாக போடியில் நீலமேகம் என்ற பயிற்சியாளரிடம் பளு துாக்குதல் பயிற்சி பெற்று,2025 முதல்வர் கோப்பைக்கான அரசு அலுவலர்களுக்கான பெண்கள் பிரிவில் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றும், பளுதுாக்குதல் போட்டிகளில் சாதனையும் படைத்துள்ளேன். தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் உண்டு. பத்துப்பாட்டு,எட்டுத்தொகை நுால்களை படித்து, ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.